பொறியியல் படிப்புகளுக்கான ( பி.இ.) நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப முடியாமல் திண்டாடும் தனியார் பொறியியல் கல்லூரிகள், நிர்வாக இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு ஒப்படைக்கத் தொடங்கியுள்ளன.
இதுவரை 220 கல்லூரிகள் நிர்வாக இடங்களை ஒப்படைத்துள்ளன.
கடந்த 2013 }ஆம் ஆண்டு முதல் பொறியில் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
இதனால் ஆண்டுக்கு 10 முதல் 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதோடு, தொடர்ந்து செயல்படும் பொறியியல் கல்லூரிகளும் இடங்களை நிரப்ப முடியாமல் திண்டாடி வருகின்றன.
இந்த நிலை காரணமாக, பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்களை ஈர்க்கும் வகையில் பள்ளிகளுக்கு பேராசிரியர்களை அனுப்புவது, நிரம்பாத நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு ஒப்படைப்பது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வுக்கு மாணவர்களை முகவர்கள் மூலம் ஈர்ப்பது போன்ற நடவடிக்கைகளை பொறியியல் கல்லூரிகள் மேற்கொண்டு வந்தன. இந்த ஆண்டும் இதே நிலை தொடர்வதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக ஆன் }லைன் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள், நிர்வாக ஒதுக்கீட்டு பி.இ. இடங்களை ஏப்ரல் மாதம் முதல் நிரப்பி வருகின்றன.
இருந்தபோதும், தமிழகம் முழுவதும் உள்ள இரண்டாம் நிலை பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பவில்லை என்கின்றனர் தனியார் பொறியியல் கல்லூரிகளின் சங்க நிர்வாகிகள்.
இதுவரை 220 கல்லூரிகள்:
இதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப முடியாத பொறியியல் கல்லூரிகள், தங்களிடம் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை மட்டுமின்றி, நிரம்பாத நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு ஒப்படைப்பு வழக்கம்.
இந்த ஆண்டு நிர்வாக பி.இ. இடங்களை ஒப்படைக்க மே 28 கடைசித் தேதி என்ற நிலையில், இதுவரை 220 பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைத்திருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கால அவகாசம் இன்னும் இருப்பதால், கல்லூரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கேள்விக்குறியாகும் பேராசிரியர் நிலை: இதுகுறித்து ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அன்புச்செல்வன் கூறுகையில், "மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், பல பொறியியல் கல்லூரிகள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 5 முதல் 10 பேராசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தலா 2 மாணவர்களைச் சேர்க்க பேராசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த ஆண்டும் இதுபோல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களை ஈர்க்க பேராசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை' என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக