மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் முதுநிலைப் பட்டயப் படிப்பு (பிஜி டிப்ளோமா) தொடங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (மே 29) தெரிவித்துள்ளார்.
நேற்று தொடங்கிய தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குப் புதிய கட்டடம் வேண்டும் என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு 2 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் முதன்மை சிகிச்சை பிரிவும், 1 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை பிரிவும், ரூ.12 லட்சம் செலவில் இளம் சிசு பராமரிப்பு மையமும் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தேவைக்கேற்ப மருத்துவமனைக்குப் புதிய கட்டடங்களும் கட்டித்தரப்படும் என்று கூறினார். இதுதவிர பட்டுக்கோட்டை, கடலூர், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் மருத்துவக் கல்லூரி இல்லாத மருத்துவமனைகளில் பி.ஜி.கோர்ஸ் எனச் சொல்லக்கூடிய முதுநிலை பட்டயப் படிப்புகள் தொடங்க அரசு ஆணைப் பிறப்பித்துள்ளதாகவும், அவை விரைவில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக