மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கட்டாய மாற்றுச் சான்றிதழ் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக பெரும்பாலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தால் அவர்களை பிளஸ் 1-ல் அதே பள்ளியில் சேர்க்காமல் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பும் வழக்கம் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்தது.
தங்கள் பள்ளியில் அதிக அளவில் ரிசல்ட் காண்பிப்பதற்காக இந்த முடிவைப் பள்ளிகள் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதே போல் பிளஸ் 1 வகுப்பில் பயிலும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அவர்களை மீண்டும் பிளஸ் 1 படிக்க நிர்பந்தப்படுத்துவதாகவும், வெளியே அனுப்பும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மன உளைச்சலும், தேவையற்ற அலைச்சல், பண விரயமும் அதிகரித்தது.
குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மற்ற பள்ளிகளும் ஏற்க மறுத்ததால் அவர்கள் கல்வியே பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து தற்போது புதிய உத்தரவை மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அளித்துள்ளது.
பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அதே பள்ளியிலேயே தொடர வேண்டும் மதிப்பெண்ணைக் காரணமாக வைத்து வெளியே அனுப்பக்கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இது குறித்த அவரது அறிவிப்பு:
பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள காரணத்தை சுட்டிக்காட்டி 11-ம் வகுப்பில் அதே பள்ளியில் சேர்க்கை மறுப்பதைத் தவிர்க்கவும், பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 11-ம் வகுப்பின் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கவும் வேண்டும்.
2017-18 -ம் கல்வியாண்டில் 11-ம் மேல்நிலைப் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகம் படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேல்நிலை வகுப்புகள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகால படிப்பாக கருதப்பட வேண்டும். மேல்நிலை முதலாம் ஆண்டு முடித்து தொடர்ந்து 12-ம் வகுப்பு முடிக்கப்பட வேண்டும்.
தற்போது, 11-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும், சில பாடங்களில் தோல்வியுற்றதாலும் இக்காரணங்களை சுட்டிக்காட்டி அம்மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது போன்ற செயல்பாடு முற்றிலும் ஏற்கதக்கதல்ல.
அ). 11-ம் வகுப்பில் தோல்வியுற்ற அம்மாணவர்கள் தொடர்ந்து 12-ம்வகுப்பில் பயில அனுமதித்து சிறப்பு பயிற்சி (coaching) எடுக்கப்பட்டு அம்மாணவர்களை தேர்வில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
ஆ). குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் தோல்வியுற்ற மாணவர்களையும் ஊக்குவித்து வெற்றி பெறச் செய்வதே பள்ளியின் முதன்மையான கடமை என பள்ளி நிர்வாகம் செயல்படவேண்டும்.
இ). 11-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், தோல்வியுற்றதாகவும் காரணம்காட்டி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோர்களை நிர்பந்தம் செய்யகூடாது.
மேற்கண்ட சுற்றறிக்கையினை அனைத்து மெட்ரிகுலேஷன் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி அதன்படி செயல்படத்தக்க அறிவுரை வழங்கவும் இப்பொருள் சார்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்/ மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு புகார் வரப்பெற்றின் அப்புகாரின் மீது உடனடியாக விசாரணை செய்து மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் பள்ளிகளுக்கு தக்க அறிவுரை வழங்கி துரித நடவடிக்கையை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக