புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 2016 ஜனவரி முதல் செப்டம்பர் 2017 வரையிலான 21 மாத கால 7ஆவது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை எண் 56ஐ ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அரசுத் துறை ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார் அந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
எனவே அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தால் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், போராட்டம் நடத்தத் தடை விதித்ததோடு, தமிழக தலைமை செயலாளர் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிடப்பட்டது. எனினும் அவர்களது கோரிக்கைகளுக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே கடந்த மாதம் மீண்டும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் நேற்று (ஜூன் 9) ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது
இதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நாளை முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.
மக்களுக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதோ, போராட்டம் நடத்த வேண்டும் என்பதோ எங்கள் நோக்கமல்ல. போராட்டத்தை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோடைக் கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக