ஆன்மீகப் பயணமான அமர்நாத் யாத்திரை ஜூன் 28 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
அமர்நாத் யாத்திரை என்பது ,இந்துக்களின் கடவுளான சிவபெருமானின் பக்தர்கள் மேற்கொள்ளும் ஒரு ஆன்மீகப் பயணமாகும். காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் சென்று வருவதுண்டு.
இந்த ஆண்டு வரும் ஜூன் மாதம் 28ஆம் தேதி அமர்நாத் பயணம் தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. இதற்கு சுமார் 1.69 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 2,122 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். 28,516 பேர் ஹெலிகாப்டர் மூலம் யாத்திரைக்குச் சென்றுவர பதிவு செய்துள்ளனர். 13 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்ய அனுமதியில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது.
பக்தர்களின் வாகனங்களை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பது, சிசிடிவி, செல்போன் ஜாமர்கள் பொருத்துவது, குண்டு வீச்சில், இருந்து தப்பிக்க நிலவறைகள், வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் என பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.
இதுதவிர பக்தர்களின் பாதுகாப்புக்காகக் கூடுதலாக 22000 பாதுகாப்பு படை வீரர்களை மத்திய அரசிடம் காஷ்மீர் அரசு கேட்டுள்ளது. அமர்நாத் செல்லும் வழிகளில் காவல்துறையினர், சிஆர்பிஎஃப் வீரர்கள் நிறுத்தப்படவுள்ளனர். கடந்த வாரம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு 2.20 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்தனர். 2017ஆம் ஆண்டு 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது தீவிரவாதத் தாக்குதல் மற்றும் பேருந்து விபத்துகளில் சிக்கி 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக