பிஎஸ்என்எல் நிறுவனத்தை கேலி செய்யும் விதமாக வாட்ஸ் ஆப் குரூப்பில் சிரிப்பு எமோஜிகளை அனுப்பிய 46 ஊழியர்கள் மீது வழக்கு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தூத்துக்குடி மண்டல பொறியாளராக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி. இவர் தங்கள் நிறுவன ஊழியர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப்பில், பிஎஸ்என்எல் நிறுவன நெட்வொர்க் குறித்து மூன்று வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் அடங்கிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த சில ஊழியர்கள் அதனைக் கேலி செய்யும் விதமாக, அழுகையுடன் கூடிய சிரிப்பைக் கொண்ட எமோஜிகளைப் பதிவிட்டனர். இதனைக் கண்டு மனஉளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி, பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு தூத்துக்குடி தெற்கு காவல் ஆய்வாளர், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 46 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்எஸ் சுந்தர், "ஒவ்வொரு நபருக்கும் தங்களது உணர்வை வெளிப்படுத்த உரிமையுண்டு. அழுகையுடன் கூடிய சிரிப்பைக் கொண்ட எமோஜிகளைப் பதிவிட்டது, ஒருவரின் உணர்வை வெளிப்படுத்தும் செய்கையாகும். அதேசமயம் பிற ஊழியர்களின் தனிப்பட்ட கருத்தால், ஒரு பெண் ஊழியர் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து, எழுத்துப்பூர்வ வாக்குமூலம் அளிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக