விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக ஒன்றிய அரசு தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பதாக ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியுள்ளார்.
ரிஷிகேஷில் நடந்த கால்நடை விலங்குகளுக்கான நாட்டின் முதல் வகைப்படுத்தப்பட்ட கருவூட்டல் ஆய்வகக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு ராதாமோகன் சிங் இதுகுறித்து பேசுகையில், "நாட்டின் முதல் செயற்கை கருவூட்டல் முறையிலான பெண் கால்நடை கன்றுகளை உருவாக்கும் ஆய்வகம் இங்கு அமைக்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மிகப் பயனுள்ளதாய் இருக்கும்.
இந்தத் திட்டம் கால்நடை உற்பத்தியை அதிகரித்து பால் உற்பத்தியை அதிகரிக்கும் புதுமையானத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும். கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்கான ஒன்றிய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 700க்கும் அதிகமான வேளாண் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு விவசாயிகளுக்கானத் திட்டங்களை ஆய்வு செய்து செயல்படுத்தி வருகிறோம். கால்நடை வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டத்தை சாத்தியப்படுத்தலாம்" என்றார். ராஷ்டிரிய கோகுல் மிசன் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேசுகையில், "ராஷ்டிரிய கோகுல் மிசன் யோஜனா திட்டம் மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த செயற்கை கருவூட்டல் ஆய்வு மையம் கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த பயனுள்ளதாய் இருக்கும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக