திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
மத்தியில் நடைபெற்ற 2009-14 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக இருந்த மு.க.அழகிரி, சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று கூறி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை அழகிரி அமைதியாய் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது குறித்துப் பேசிய அழகிரி, ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றிபெறாது என்று தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அழகிரி திமுகவில் இல்லை, எனவே அவருடைய கருத்தைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று திமுக சார்பில் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் பதிலளித்தார்.
இந்நிலையில் அழகிரி ஆதரவாளரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான மன்னன் இல்லத் திருமண விழா இன்று (ஜூன் 10) திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர்கள் பாலா, சமுத்திரகனி, பின்னணி பாடகர் மனோ, துரை தயாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய அழகிரி, "மன்னன் உள்பட என்னுடன் இருப்பவர்கள் பதவிக்காக இருப்பவர்கள் அல்ல. ஆனால் இப்போது கழகத்தில் இருக்கக் கூடியவர்கள் எல்லாம் பதவிக்காக இருக்கக் கூடியவர்கள்தான். அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அப்போது அங்கே எத்தனை பேர் இருப்பார்கள்? எத்தனைப் பேர் போவார்கள்? என்பது தெரியவரும். நான் அடுத்த வருடம் பேசலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் நண்பர்களின் வற்புறுத்தலால் இங்கு பேசவேண்டியதாகி விட்டது" என்று தெரிவித்தார். . இந்தத் திருமணத்திற்கு வரும்போது நல்லவேளையாக என் வேட்டியை உருவிவிடாமல் இருந்தார்கள். அந்த அளவுக்குக் கூட்டம் மாநாடு போல இருந்தது என்றும் அழகிரி புகழ்ந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக