இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் கல்வி விசா கிடைப்பது 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜோசப் எம்.போம்பர் இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ' கடந்த ஆண்டு அமெரிக்காவில் தங்கிப் படிக்க இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசாக்களின் எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள 4,500 கல்வி நிறுவனங்களில் படிக்க 1,86,000 இந்தியர்களுக்குக் கடந்த ஆண்டில் விசா வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தங்கிப் படிக்கின்ற மாணவர்களைக் கொண்ட நாடுகளில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை பாடப் பிரிவுகளுக்கு 72 விழுக்காட்டினர் விண்ணப்பித்துள்ளனர். தொழில் பாடப் பிரிவுகளுக்கு 10 விழுக்காட்டினரும், உடற்கல்வி மற்றும் வாழ்க்கை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 6 விழுக்காட்டினரும், சுகாதாரப் பாடப் பிரிவுகளுக்கு 3 விழுக்காட்டினரும், சமூக அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 2 விழுக்காட்டினரும் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களில் 56 விழுக்காட்டினர் உயர் பட்டப் படிப்புகளுக்காகத்தான் செல்கின்றனர். 11 விழுக்காட்டினர் மட்டுமே இளங்கலைப் படிப்புகளுக்காகச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக