மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தத் தடை கோரிய மனுவுக்கு வரும் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு 10 இடங்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், பொதுப் பிரிவு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு முன்பே முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும், சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்கள், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைக்குத் தடை விதிக்கக் கோரி, விமானப்படை முன்னாள் அதிகாரியான சுப்பிரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிற ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்குபெறும் மாணவர்கள், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கும் போது, சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது பாரபட்சமானது என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனுவை இன்று (ஜூன் 23) விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், மனுவுக்கு 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக் குழுவுக்கும் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக