கடலுார் : ஆசிரியர்கள் வருகைப்பதிவை தினசரி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் மெத்தனம் காட்டி
வரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் பழமையான கடலுார் மாவட்டத்தில் புகழ் வாய்ந்த பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு படித்த பலர் நாட்டின் பல்வேறு உயர் பதவிகளில் பணி புரிந்து வருகின்றனர். அந்தளவிற்கு கல்வியில் சிறந்த விளங்கிய கடலுார் மாவட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற அரசின் உத்தரவால், பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதன் காரணமாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து போதிய கற்றல் திறனின்றி உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் மாவட்டத்தில் வெகுவாக குறைந்து மாநில பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணி நேரத்திற்கு சரிவர வராததே இதற்கு முக்கிய காரணம் என்பதை கடந்த 2010ம் ஆண்டு கலெக்டராக இருந்த அமுதவல்லி கண்டறிந்து, ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திட எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.அதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி துவங்கும் நேரம் முடிந்ததும் ஆசிரியர்கள் வருகை விபரத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திற்கு (நிக்) மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். இந்த திட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு கட்டாயம் வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்பாட்டினால், மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் திறன் படிப்படியாக உயர்ந்து வருவதால், பொதுத்தேர்வில் கடைசி இடத்தில் இருந்த கடலுார் மாவட்டம் தற்போது 27ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.இந்த நிலையில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்புவதில் பல தலைமை ஆசிரியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் 1,082 தொடக்கப் பள்ளிகள், 341 நடுநிலைப் பள்ளிகள், 146 உயர்நிலைப் பள்ளிகள், 135 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,704 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.இப்பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டு துவக்கத்திலேயே 208 தொடக்கப் பள்ளி, 47 நடுநிலைப் பள்ளி, 24 உயர்நிலைப் பள்ளி, 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்த 296 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர். எஸ்.எம்.எஸ்., அனுப்பிய தலைமை ஆசிரியர்களில் 115 பேர் வருகைப்பதிவை தவறாக அனுப்பியுள்ளதால், பதிவு ஏற்கப்படவில்லை.
பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை ஆய்வு செய்த, கலெக்டர் தண்டபாணி, வருகைப்பதிவு எஸ்.எம்.எஸ்., பதிவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.அதன்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (பொறுப்பு) முனுசாமி, ஆசிரியர்கள் வருகைப்பதிவை தினமும், குறித்த நேரத்தில் எஸ்.எம்.எஸ்., அனுப்பவும், தவறும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை அன்று மாலைக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக