சீனாவிலிருந்து பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான தடையானது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியிலும் பால் நுகர்விலும் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பால் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியையும் இந்தியா நம்பியுள்ளது. அதன்படி சீனாவிலிருந்து முன்பு பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. சீனப் பாலில் மெலமைன் என்ற ரசாயனம் கலந்திருப்பதை இந்தியா கண்டுபிடித்தது. நச்சுத்தன்மை கொண்ட இந்த மெலமைன் ரசாயனம் பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் உரம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும். அப்படிப்பட்ட ரசாயனக் கலப்பு இருப்பதால் சீனாவிலிருந்து பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்ய 2008ஆம் ஆண்டில் இந்தியா தடை விதித்து உத்தரவிட்டது.
அதன்பின்னர் பல்வேறு முறை இத்தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாகப் பால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையானது இந்த ஆண்டின் ஜூன் 23ஆம் தேதி முடிவடைந்தது. அத்தடையானது இப்போது இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால், பால் பொருட்கள் மற்றும் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களுக்கான தடை டிசம்பர் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அதுவரையில் சீனாவிலிருந்து பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக