பார்வை குறைபாடு உள்ள மாணவரை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்த்து படிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து மருத்துவ ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவர் பர்ஸ்வானி அசுதோஷ். பார்வை திறன் குறைபாடு உள்ளவர்.
இவர், உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழ், இந்தாண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வை எழுதினார்.
அதில், அகில இந்திய அளவில் 4 லட்சத்து 68,982வது இடத்தையும், ஊனமுற்றோர் பிரிவில் 419வது இடத்தையும் பெற்றார்.
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு இடஒதுக்கீட்டின் படி, பர்ஸ்வானிக்கு மருத்துவம் அல்லது பல் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இதற்காக, கடந்த மே 30ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியை அணுகிய அவர், பார்வை திறன் குறைபாடு உள்ள தனக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கக் கோரினார். ஆனால் மருத்துவ ஆய்வு மேற்கொள்ள அந்த மருத்துவ கல்லூரி மறுத்து விட்டது.
இதே போல, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவ கல்லூரியை அணுகியும் பயனில்லை.இதுதொடர்பாக மாணவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் யு.யு.லலித், தீபக் குப்தா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘சட்டம், ஆசிரியர் போன்ற பிற துறைகளாக இருந்தால், கண் பார்வை இல்லாதவர்கள் கூட அதற்கான படிப்பை படித்து அத்துறையில் பணியாற்ற முடியும்.
ஆனால், பார்வை திறன் குறைபாடு உள்ளவாரால் எம்பிபிஎஸ் படிப்பை படித்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது சாத்தியமா, நடக்கக் கூடிய காரியமா என்பது யோசிக்க வேண்டியது.
எனவே, மனுதாரர் 3 நாட்களுக்குள் அகமதாபாத் மருத்துவ கல்லூரி மருத்துவர் குழு முன்பு ஆஜராக வேண்டும்.
அக்குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இது தொடர்பாக, மத்திய மற்றும் குஜராத் அரசு தரப்பில் பதிலளிக்கவும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு நிறப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக