சென்னை சட்டக் கல்லூரியை மூட எதிர்ப்பு தெரிவித்த மனுவிற்கு ஜூன் 22ஆம் பதில் அளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில், 2008ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி சண்முகம் ஆணையம், கல்லூரியை இடம் மாற்றம் செய்ய பரிந்துரைத்தது.
அதன்படி சென்னை சட்டக் கல்லூரியை மூடிவிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர், காஞ்சிபுரம் புதுப்பாக்கம் ஆகிய இடங்களில் புது கல்லூரிகளைத் துவங்க அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி காவியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது உள்ள கல்லூரி கட்டிடத்தைச் சீரமைத்து மீண்டும் கல்லூரியை இப்போதுள்ள இடத்திலேயே செயல்பட வேண்டும் என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி தமிழக அரசு கல்லூரியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். தொடர்ந்து தற்போது செயல்பட்டு வரும் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை இன்று (ஜூன் 15) விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனுவுக்கு வரும் ஜூன் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக