கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் தேங்காய் உற்பத்தி கணிசமான அளவில் உயர்ந்துள்ளதாக அரசு தரப்பு அறிக்கை கூறுகிறது. தேங்காய் சாகுபடி பரப்பும் இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.
2013-14ஆம் ஆண்டில் இந்தியாவில் ஹெக்டேர் ஒன்றுக்கு மொத்தம் 10,122 தேங்காய்கள் விளைந்தன. அந்த எண்ணிக்கை 2017-18ஆம் ஆண்டில் 11,516 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் தேங்காய் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக உள்ளன. தேங்காய் சாகுபடிப் பரப்பும் இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதாவது 2010-14 காலகட்டத்தில் 9,561 ஹெக்டேர் பரப்பு தேங்காய் சாகுபடியில் புதிதாக இணைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அளவு 2014-18க்கு இடைப்பட்ட காலத்தில் 13,117 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஒடிசா ஆகிய பகுதிகளில் தேங்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் தேங்காய் உற்பத்தியில் 5,115 குழுக்களும், 430 கூட்டமைப்புகளும், 67 நிறுவனங்களும் தேங்காய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. தேங்காய் உற்பத்தி அதிகரிப்பதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தியும், அதன் வாயிலாக ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. இந்தியாவின் தாவர எண்ணெய்க்கான தேவை ஆண்டு ஒன்றுக்கு 17 மில்லியன் டன்னாக இருக்கிறது. இதில் சுமார் 60 சதவிகிதம் அளவு இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும்போது இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக