திமுகவினர் வைத்த பேனர் மற்றும் கொடிகளால் நடைபாதை சேதமடைந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டிய நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஜெ.அன்பழகன், "சேதமடைந்ததை எங்கள் கட்சியினரே சரி செய்வார்கள்" என்றும் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நகர் எம்.ஜி.ஆர். காலனியில் நேற்று இரவு (ஜூன் 16) நடைபெற்றது. விழாவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கூட்டத்திற்காக பேனர்களும், திமுக கொடிகளும் வைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை புகைப்படம் எடுத்து தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறப்போர் இயக்கம், "ஈகா தியேட்டர் முதல் கோயம்பேடு வரை பேனர் வைக்கத் திமுகவினருக்கு திரு.ஸ்டாலின் விதித்த தடை காற்றில் பறந்து கொண்டு இருக்கிறது. க்ரானைட் நடைபாதைகள் முழுவதும் உடைக்கப்பட்டுள்ளன.அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் நிலை இது தான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிவிட்டரில் திமுக அதிகாரப்பூர்வ பக்கம் மற்றும் ஸ்டாலினை டேக் செய்துள்ள அறப்போர் இயக்கம், "ஈகா தியேட்டர் முதல் கோயம்பேடு வரை உள்ள கிரானைட் நடைபாதைகளை சேதப்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு உடனே திமுகவிலிருந்து எதிர்வினையாற்றப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.வும் திமுக மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடந்த சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எதுவாகினும் எங்களால் ஏற்பட்ட சேதத்தை எங்கள் கட்சி உறுப்பினர்களே சரி செய்வார்கள். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க உறுதி கூறுகிறேன். எங்களுக்கு ஆட்சியதிகாரத்தில் பல அனுபவங்கள் உள்ளன. எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். உங்களுடைய தகவலுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில்,"தி.மு.க., தொண்டர்கள் ஆடம்பர பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். சாலையின் இரு புறமும் தி.மு.க., தொண்டர்கள் என்னை வரவேற்று பேனர்கள் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பேனர்களை கண்டு பொது மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதை எச்சரிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. சாலையின் இரு புரத்திலும், சாலையின் நடுவிலும் பேனர் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
என்ன நிகழ்ச்சி நடக்கிறது எங்கு நடக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க ஒரு இடத்தில் மட்டும் வைக்கலாம். அதுவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வைக்க வேண்டும். பேனர்களில், பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் படங்கள் மட்டும் இருந்தால் போதும்" என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக