ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் படகுகளில் வந்து நடுக்கடலில் ஒன்பது நாட்கள் தத்தளித்த 630 அகதிகளுக்கு ஸ்பெயின் அரசு நேற்று (ஜூன் 16) அடைக்கலம் அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் சஹாரா பாலைவனப்பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்துவந்த அகதிகள் படகு, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரின் அருகே நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டது.
அவர்களைத் தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க இத்தாலியும் மால்டாவும் மறுத்துவிட்ட நிலையில் நடுக்கடலில் கடந்த ஒன்பது நாட்களாகத் தவிக்க நேரிட்டது. படகுகளில் இருந்தவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த 630 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறிய கப்பல் மற்றும் இரு படகுகளில் அவர்கள் ஸ்பெயின் நாட்டைச் நோக்கிச் சென்று கொண்டுள்ளனர்.
அவர்களில் பலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், 123 சிறுவர் - சிறுமியர் மற்றும் ஏழு கர்ப்பிணிப் பெண்களும் அந்தக் கப்பலில் வருவதால் தொண்டு நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் அவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றனர்.
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர்.
சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இத்தாலி நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக