கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆயுட்காலம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, குறைந்தபட்சம் வரும் 2019 மக்களவைத் தேர்தல் வரை தனது பதவியை யாரும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.
பெங்களூருவில் நேற்று (ஜூன் 15) நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி. அப்போது, தனது பதவிக்காலத்தை வீணாக்கமாட்டேன் என்றும், கர்நாடகாவை வளர்ச்சிப்படுத்தும் அனைத்துப் பணிகளிலும் தன்னை இணைத்துக்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தக் கூட்டணி அரசானது நிலைத்தன்மையுடன் செயல்படும். ஒரு வருடத்துக்கு, யாரும் என்னை நெருங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். குறைந்தபட்சம் மக்களவைத் தேர்தல் முடியும்வரை முதலமைச்சர் பதவியில் இருப்பேன். அதுவரை, என்னிடம் யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று அவர் கூறினார். இந்த காலகட்டத்தில் தான் அமைதியாக இருக்கப் போவதில்லை எனவும், மாநிலத்துக்கு நன்மை பயக்கும் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகவும் பேசினார்.
“இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நான் என்ன செய்யப்போகிறேன் என்பதில் மட்டும் கவனம் செலுத்தப்போகிறேன்; மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று யோசிக்கப் போவதில்லை. தற்போது இயற்கையும் எனக்குச் சாதகமாக உள்ளது” என்று தெரிவித்தார் குமாரசாமி. கூட்டணி அரசின் சார்பாக அமைச்சரவை அமைக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு பெருகிய நிலையில், அவர் இவ்வாறு தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் விவசாயக்கடன் தள்ளுபடியானது விரைவில் அறிவிக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தார் குமாரசாமி. இதுபற்றிப் பேசியவர், விவசாயிகளீன் கடன் தள்ளுபடி பிரச்சினையில் இருந்து தான் தப்பிக்க நினைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் கர்நாடக மாநில பட்ஜெட்டை முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தாக்கல் செய்த நிலையில், வரும் ஜூலை மாதம் அம்மாநிலத்துக்கான முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார் குமாரசாமி. இடைக்கால பட்ஜெட் முழுமையானதாக இல்லையென நிதி நிபுணர்கள் கூறியதால், தற்போது மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக அவர் கூறினார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலமாக, குமாரசாமிக்குப் பெயர் கிடைத்துவிடும் என்று சிலர் அஞ்சுவதாகவும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக