மோடி கேர் திட்டத்தைச் செயல்படுத்த 20 மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
ஆயுஷ்மேன் பாரத்- தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அறிவித்தது. இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்று பாஜகவினர் புகழாரம் சூட்டினர். இத்திட்டத்தை ’மோடி கேர் திட்டம்’ என்றும் அழைத்தனர். இந்நிலையில் தற்போது இத்திட்டத்தை 20 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜே.பி.நட்டா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தக் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம். மாநில அரசுகளின் உதவியால்தான் இந்தத் திட்டம் முழுமையடையும். இதுவரையில் 20 மாநிலங்கள் இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் மேலும் ஐந்து மாநிலங்கள் இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டும் ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வரை வழங்கப்படவுள்ளது. தனியார் மருத்துவ நிறுவனங்களிலும் இந்தத் திட்டத்தின் மருத்துவ சேவைகள் அளிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி தேவைப்படுவதாக பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம் கூறியிருந்த நிலையில் ரூ.10,000 கோடியை மட்டுமே முதல்கட்டமாக ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக