கரும்பு விவசாயிகளுக்கு வழங்க எங்களிடம் பணம் இல்லை என்று சர்க்கரை ஆலைகள் கூறியுள்ளன.
சர்க்கரை ஆலை உற்பத்தியாளர்கள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். உள்நாட்டில் சர்க்கரை விலை சரிவு, இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை போன்றவற்றால் சர்க்கரை விற்பனையில் கடும் வீழ்ச்சியை ஆலை உரிமையாளர்கள் சந்தித்துள்ளனர். இதனால் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.22,000 கோடியை எட்டியுள்ளது.
இதையடுத்து விவசாயிகளையும், ஆலை உற்பத்தியாளர்களையும் காக்கும் விதமாக ரூ.8,000 கோடி உதவித் தொகையை ஒன்றிய அரசு அறிவித்தது. மேலும் 3 மில்லியன் டன் சர்க்கரையைக் கொள்முதல் செய்துகொள்வதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க எங்களிடம் பணம் இல்லை என்று ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும், கர்மவீர் சங்கரோஜி பாட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைவருமான ஹர்ஸ்வர்தன் பாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், "சர்க்கரை ஆலைகள் 8000 கோடி ரூபாய் பணத்தை பெற்றுவிட்டதாக விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட உதவித் தொகையே இன்னும் முழுமையாக எங்களுக்குக் கிடைக்கவில்லை. இதுவரையில் ரூ.4047 கோடி மதிப்பிலான உதவிகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும், கையில் உள்ள இருப்பை விற்கவும், எத்தனால் ஆலை அமைக்க வழங்கப்பட்ட கடன் திட்ட உதவிகள்தான். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க உதவித் தொகையை அரசு அதிகரிக்க வேண்டும். அதேபோல இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கரும்புக்கான குறைந்தபட்ச விற்பனை விலை ஆலைகளுக்குப் பயன்படவில்லை" என்றார்.
மகாராஷ்டிராவில் உள்ள 178 சர்க்கரை ஆலைகளில் இதுவரை 77 ஆலைகள் மட்டுமே கரும்புக்கான முழு நிலுவைத் தொகையையும் வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக