திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனது மகன் மு.க.தமிழரசுவின் இல்லத்துக்குச் சென்றார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவினால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை தமிழகத் தலைவர்கள் மட்டுமல்லாது பிரதமர் உள்பட தேசியத் தலைவர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா கண்காட்சி, அண்ணா அறிவாலயம், சிஐடி காலனி இல்லம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று வந்தார். அவருக்குப் புத்துணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மு.க.தமிழரசுவின் பேரனை அழைத்து வந்து அவருடன் விளையாடவும் வைக்கின்றனர்.
கடந்த 3ஆம் தேதி கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் திமுகவினரால் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்த கருணாநிதி, அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே கையை அசைத்தார். அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர். மீண்டும் ஒருமுறை தொண்டர்களை நோக்கிக் கையசைத்த பின்னர், கருணாநிதி வீட்டுக்குச் சென்றார்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று மாலை (ஜூன் 16) கோபாலபுரம் இல்லத்திலிருந்து காரில் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்திலுள்ள தனது மகன் மு.க.தமிழரசு இல்லத்துக்குச் சென்றார் கருணாநிதி. அவருடன் காரில் தமிழரசுவும் சென்றார். உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு, தற்போது முதன்முறையாக தமிழரசுவின் இல்லத்துக்கு கருணாநிதி சென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக