டெல்லி சென்றார் முதல்வர்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

டெல்லி சென்றார் முதல்வர்!

இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்னும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினர்களாக முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர். நிதி ஆயோக்கின் வருடாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற இருந்த நிலையில், ரம்ஜானை முன்னிட்டு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நேற்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்துக்குத் தேவையான வளர்ச்சி நிதிகள் குறித்து பேசவுள்ளார். கூட்டமானது காலை 10 மணிக்குத் தொடங்கி இரு அமர்வுகளாக நடக்கிறது.

இதன் பிறகு பிரதமர் மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாகச் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்பில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டதற்குப் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பார் என்றும், தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள், வரவேண்டிய நிலுவைத் தொகை குறித்து வலியுறுத்தி மனு அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

டெல்லி சென்றுள்ள முதல்வருக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வைத்துள்ள கோரிக்கையில், "முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் பற்றி விரிவாகப் பேச வேண்டும். குறிப்பாகத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க முயற்சி எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ள அவர், ஸ்டெர்லைட்,ஷெல் காஸ், நியூட்ரினோ, மீத்தேன் எரிவாயு, அணை பாதுகாப்பு மசோதா, நீட் உள்ளிட்ட தமிழகத்தின் தற்போதைய பிரச்சினைகள் குறித்தும் விரிவாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் தற்போதைய டெல்லி பயணம் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு மத்திய அரசு சுமுகத் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தும் விதமாக அமைய வேண்டும் என்றும் வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here