என்.சந்திரசேகரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு சென்ற 2017-18 நிதியாண்டில் டாடா குழுமத்தின் லாபம் 35 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான டாடா, ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், எஃகு, ரசாயனம், நுகர்பொருள், ஆற்றல், பொறியியல், சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சிரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்ட பிறகு தற்காலிகத் தலைவராக இருந்த ரத்தன் டாடாவைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் டாடா குழுமத்தின் புதிய தலைவராக 2017 ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு டாடா குழுமம் அனைத்துத் தொழில்களிலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பெற்று வருகிறது. 2017-18 நிதியாண்டில் டாடா நிறுவனங்கள் 35 சதவிகித லாபத்தை ஈட்டியுள்ளன. இதற்கு முந்தைய நிதியாண்டில் அந்நிறுவனங்கள் 0.5 சதவிகித சரிவைச் சந்தித்திருந்தன.
டாடா குழுமத்தின் வருவாயும் 9.2 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருவாய் உள்நாட்டில் 23 சதவிகிதம் உயர்ந்துள்ளது. டாடா ஸ்டீல் தவிர்த்து இதர நிறுவனங்களின் மொத்த வருவாய் வளர்ச்சி 10.3 சதவிகிதம் மட்டுமே. நீண்ட காலமாகவே டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வருவாயில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் டாடா கன்சல்டன்ஸி சர்வைசஸ் (டிசிஎஸ்) மற்றும் டாடா மோட்டார்ஸின் கிளை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்கள் சந்தையில் நிலவிய போட்டி காரணமாகச் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளன. எனினும், நுகர்பொருள் பிரிவில் ஓரளவுக்கு லாபம் கிடைத்துள்ளது.
டாடாவின் 16 நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டிசிஎஸ் இணைந்து டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 85 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. டாடாவின் வருவாய் உயர்வுக்கு நடராஜன் சந்திரசேகரனின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக