சர்வர் பழுது காரணமாக, அரசு இ--சேவை மையங்கள் முடங்கியுள்ளன. இதனால், பள்ளி, கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள் சான்றிதழ் கிடைக்காமல் வேதனை அடைந்துள்ளனர்.
அரசு கேபிள் 'டிவி' கார்ப்ரேஷன் மூலம், தாலுகா அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்களில், இ--சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் மூலமே, இருப்பிடம், சாதி, வருமானம் உட்பட, 15க்கும் மேற்பட்ட சான்றிதழ் வாங்க முடியும்.
சான்றிதழ் பதிவு செய்ததும், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். சான்றிதழ் தற்ேபாதைய நிலை குறித்து தகவலும், தயாரானதும் வாங்கிக்கொள்ளவும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
மாநிலம் முழுவதும் சர்வர் பழுது பிரச்னை காரணமாக, கடந்த மூன்று நாட்களாக, இ--சேவை மையங்களில் சான்றிதழ் அளிக்கும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
இதனால், இன்ஜினியரிங் கவுன்சிலிங், கல்லுாரியில் சேர்க்கை, முதல் பட்டதாரி சான்று, பிளஸ் 1 என மாணவர் சேர்க்கைக்கு, தேவைப்படும் சான்றிதழ் கிடைக்காமல், மாணவ, மாணவியர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். இதனால், இ--சேவை மையங்களின் சர்வர் எப்போது சரியாகும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'மாநிலம் முழுவதும் சர்வர் பழுது காரணமாக, மூன்று நாட்களாக இ--சேவை மையங்கள் முடங்கியுள்ளன.
இரண்டு வாரங்களாக பதிவு செய்த சான்றிதழ்களுக்கு அனுமதியும் வழங்க முடியவில்லை. சர்வர் சரியானால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்,' என்றனர்.
இன்ஜினியரிங் மற்றும் அரசு கல்லுாரிகளில் கவுன்சிலிங் துவங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் உடனடியாக கிடைக்கவும், கவுன்சிலிங் கால அவகாசம் நீட்டிப்பு செய்யவும், உரிய நடவடிக்கையை, தமிழக அரசு எடுக்க வேண்டுமென, மாணவர்களும், பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக