மலிவு விலையிலான வீடுகள் கட்டுவதற்கு ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக, நடுத்தர வருமானம் பெறும் மக்களின், மானியத்துக்குத் தகுதியுடைய வீடுகளின் கார்பெட் ஏரியா (ஒரு வீட்டைச் சுற்றியிருக்கும் இடம் அல்லாது, கட்டடத்தின் இடம் மட்டும்) 33 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்த நடவடிக்கைகளின் வாயிலாக, இன்னும் அதிகமான நடுத்தர வருமானம் பெறும் நுகர்வோர் மானியம் பெறுவதற்குத் தகுதி பெற்று, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன்களைப் பெற்றுக் கொள்வார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. நடுத்தர வருமானம் பெறும் முதல் பிரிவு மக்களுக்கான கார்பெட் ஏரியா 120 சதுர மீட்டரிலிருந்து 160 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 6,00,000 முதல் 12,00,000 ரூபாயாக இருக்கும்.
இரண்டாம் பிரிவினருக்கான கார்பெட் ஏரியா 150 சதுர மீட்டரிலிருந்து 200 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 12,00,000 முதல் 18,00,000 ரூபாயாக இருக்கும். முதல் பிரிவினருக்கான வட்டி மானியம் நான்கு விழுக்காடாக இருக்கும். இவர்கள் 9 லட்சம் ரூபாய் கடன் பெறத் தகுதியானவர்கள். இவர்களுக்கான மானியத் தொகை 2,35,068 ரூபாய். இரண்டாம் பிரிவினருக்கான வட்டி மானியம் மூன்று விழுக்காடாக இருக்கும். இவர்கள் 12,00,000 ரூபாய் கடன் பெறத் தகுதி பெற்றவர்கள். இவர்களுக்கான மானியத் தொகை 2,30,156 ரூபாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக