சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில், கடந்த 2 நாட்களில் 80 பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் 2016ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதில், ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, ரத்த கொழுப்பு பரிசோதனைகள், கல்லீரல் ரத்த பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, இருதய பரிசோதனை, கர்ப்பப்பை வாய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் செய்து கொள்ளலாம்.
14 புதிய பணியிடங்கள் இந்த மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. 1000 ரூபாய் கட்டணத்தில் அம்மா கோல்டு திட்டம், 2000 ரூபாய் கட்டணத்தில் அம்மா டைமண்ட் திட்டம் மற்றும் 3000 ரூபாய் கட்டணத்தில் அம்மா பிளாட்டினம் திட்டம் என மூன்று பிரிவுகளின் கீழ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 11ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் அம்மா முழு உடல் பரிசோதனை மையம், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களில் 80 பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் டிஜிட்டல் மாமோகிராம் வசதி உள்ளதால், மார்பக புற்றுநோய் பரிசோதனையை அதிக பெண்கள் ஆர்வத்துடன் செய்துகொள்கிறார்கள் எனக் கூறும் மருத்துவர்கள், வரும் 25ஆம் தேதி வரை பரிசோதனைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக