சுதந்திரப் போராட்டத் தியாகிகளைத் தேடிக் கண்டுபிடித்து, மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பெரியய்யா என்ற சுதந்திரப் போராட்டத் தியாகி, ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய 91 வயது வரை ஓய்வூதியத்திற்காக சட்டரீதியாகப் போராடி வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தியாகி பெரியய்யா உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில், அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று (ஜூன் 29) வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பிக்கும் வரை காத்திருக்காமல், அவர்களின் வீடு தேடி சென்று வழங்க வேண்டும் எனக் கூறினார்.
இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, எட்டு வாரங்களில் தியாகி பெரியய்யா குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கடந்த ஜனவரி மாதத்தில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகியான காந்திக்கு (வயது 89) ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் காலதாமதம் ஏற்பட்டதற்கு நீதிமன்றம் அவரிடம் மன்னிப்பு கோரியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக