*``புதிய பாடப்புத்தகங்களில் கி.மு - கி.பி இருக்கும்" - அமைச்சர் அறிவிப்பால் நீடிக்கும் குழப்பம்!* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*``புதிய பாடப்புத்தகங்களில் கி.மு - கி.பி இருக்கும்" - அமைச்சர் அறிவிப்பால் நீடிக்கும் குழப்பம்!*

``புதிய பாடப்புத்தகங்களில் கி.மு - கி.பி இருக்கும்
பள்ளிப் பாடப்புத்தகங்களில் இதுவரை ஆண்டுகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த `கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு', `கிறிஸ்து பிறப்பதற்கு பின்பு' என்ற வார்த்தைகள் புதிய பாடத்திட்டங்களில் இருக்காது எனவும், அதற்குப் பதிலாகப் `பொது ஆண்டுக்கு முன்பு', `பொது ஆண்டுக்குப் பின்பு' எனப் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை. ஆனால், நேற்று சட்டசபையில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ```கி.மு.', `கி.பி.' என்ற முறையே தொடர்ந்து பாடத்திட்டங்களில் பயன்படுத்தப்படும்'' என்று அறிவித்துள்ளார். இது, பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது.

தமிழநாட்டுப் பாடநூல் கழகம் இந்த ஆண்டு 6, 8, 9, 11- ம் ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில், ஆண்டுகளைக் குறிப்பிட இதுவரை `கிறிஸ்து பிறப்பதற்கு முன்' (கி.மு), `கிறிஸ்து பிறப்பதற்குப் பின்' (கி.பி) என்று பயன்படுத்தப்பட்டு வந்ததை இனி `பொது ஆண்டுக்கு முன்', `பொது ஆண்டுக்குப் பின்' என்று பயன்படுத்த தமிழகப் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. மேலும், புதிதாக அச்சடிக்கப்பட்ட பாடப் புத்தகங்களிலும் `பொது ஆண்டுக்கு முன்', `பொது ஆண்டுக்குப் பின்' என்றே அச்சடிக்கப்பட்டு, அதுவும் மாணவர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின் என்ற உலகளவில் பயன்படுத்தப்படும் சொல்லை மாற்றுவது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ஒரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால், பொது ஆண்டுக்கு முன், பின் என்று சொல்வது சரிதான் என்ற ஆதரவுக் குரலும் எழுந்தது. இந்த நிலையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``கிறிஸ்துவின் பெயர் வருவதால் மட்டும் அந்த முறையைப் பள்ளிக்கல்வித் துறை நீக்கியுள்ளது என்று கூறமுடியாது. அதே நேரம், பொது ஆண்டு என்று பயன்படுத்துவது ஒரு மதச்சார்பற்ற நிலையைக் கொண்டிருக்கிறது. பொது ஆண்டு என்று பயன்படுத்துவதற்கு எதிர்ப்புகள் ஏதும் இதுவரை வரவில்லை. அப்படி வந்தால், அதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொல்லி சில நாள்களிலே சட்டசபையில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, ``புதிய பாடத்திட்டத்தில் பொது ஆண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகப் பின்பற்றக்கூடிய வரிசையில் இருப்பது கி.மு., கி.பி. ஆகும்.  அதை மாற்றும்போது ஒரு வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடும் என்றும், அதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார். அதேபோல், காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் இதே கேள்வியை எழுப்பினார். ``மதம் சார்ந்து இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பார்க்காமல் உலகளாவிய வழக்கத்தையும் நாம் பார்க்கவேண்டும்” என்று தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ``புதிய பாடத்திட்டத்தில் கி.மு.,கி.பி. என்றே பயன்படுத்தப்படும்” என்று சொல்லி இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால், இப்போது குழப்பம் வேறு வடிவில் எழுந்துள்ளது. புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்ட பாடங்களில் `பொது ஆண்டுக்கு முன், பின்', என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரோ ``கி.மு., கி.பி என்றே பின்பற்றப்படும்'' என்று அறிவித்துள்ளார். அப்படியென்றால், பிரின்ட் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களைத் திரும்பப் பெற்று மாற்றி அமைப்பார்களா அல்லது ஆசிரியர்கள் மூலம், `கி.மு., கி.பி.' என்றே பாடம் நடத்தச் சொல்வார்களா என்று தெளிவாக அமைச்சர் தரப்பிலிருந்து கூறப்படவில்லை. மேலும், பொது ஆண்டு என்பதை எதை வைத்து முடிவு செய்தார்கள் என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள். அமைச்சரின் அவசர அறிவிப்பால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் இருந்துவருகிறார்கள்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here