மூன்று மாதங்களாகப் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனும் மத்திய அரசின் அறிவிப்பை தமிழக அரசு பின்பற்றாது என்று தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் காமராஜ்.
கடந்த ஜூன் 29ஆம் தேதியன்று டெல்லியில் மாநில உணவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்களை வாங்காத அட்டைதாரர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார். இதன் மூலமாக, மானிய விலையில் உணவுப்பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து, அவர்களது ரேஷன் கார்டை ரத்து செய்ய முடியும் என்று கூறினார்.
இது தொடர்பாக, இன்று (ஜூலை 3) தமிழக சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியம் கேள்வியெழுப்பினார். அப்போது, மூன்று மாதங்களாகப் பொருட்கள் வாங்காதவரின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பினால், பல ஊர்களுக்குச் சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.
இந்தக் கேள்விக்கு, தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பதிலளித்தார். மத்திய அமைச்சர் பஸ்வான் கூறியது அறிவுரை தான் என்றும், அது கொள்கை முடிவல்ல என்றும் கூறினார். “மத்திய அரசின் இந்த அறிவிப்பை தமிழக அரசு பின்பற்றாது. மூன்று மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும், அதன்பின்னர் பொருட்கள் வழங்கப்படும். மூன்று மாதங்கள் அல்ல, 5 மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படமாட்டாது” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக