சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கிடைத்த மீன்களில் புற்றுநோய் உருவாக்கும் ஃபார்மலின் என்ற ரசாயனப் பொருள் பதப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஜெயலலிதா மீன்வளத் துறைப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு ஆகிய இரு பெரிய மீன் சந்தைகளிலிருந்து வாங்கிய மீன்களில் ஃபார்மலின் என்ற ரசாயனப் பொருள் கலக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அதை ஜெயலலிதா மீன்வளத் துறைப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஃபார்மலின் என்ற ரசாயனப் பொருளில் புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென் (carcinogen) என்ற முக்கியமான காரணிப் பொருள் உள்ளது. ஃபார்மலின் என்ற ரசாயனப் பொருள் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
ஃபார்மலினைச் சட்டவிரோதமான முறையில் வாங்கி, மீன் கெட்டுவிடாமல் இருக்கவும் மீன்களில் பாக்டீரியாக்கள் தாக்கி அவற்றைப் பாதிக்காமல் இருக்கவும் பயன்படுத்துகின்றனர். இப்படிப் பதப்படுத்தப்படும் மீன்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவற்றில் ஃபார்மலினால் பதப்படுத்தப்படும் சில வகை மீன்கள் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளன என்பதனால் விஷயம் வெளியே வந்துள்ளது. இதனை முழுமையாகப் பரிசோதிக்க ஜெயலலிதா மீன்வளத் துறைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுச் செயலில் இறங்கியது.
இரு வேறு நாட்களில், சென்னையிலுள்ள இரு பெரும் மீன் சந்தைகளிலிருந்தும் சில வகை மீன்கள் வாங்கப்பட்டன. அந்த மீன்கள் பல்கலைக்கழக அறிவியலாளர்களால் ஆய்வுக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 4 மற்றும் 8 தேதிகளில் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது போன்ற பிரத்யேகமான பரிசோதனைக்காக ஃபார்மலின் கண்டறியும் சோதனைக் கருவி உருவாக்கப்பட்டது.
இக்கருவியின் மூலம் நடத்தப்பட்ட இரு நாள் சோதனையில் அந்த மீன்களில் ஃபார்மலின் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாதவரத்திலுள்ள பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூடத்தில் சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை ஆகிய பகுதிகளிலிருந்து வாங்கப்பட்ட 13 மீன் வகை மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் ஃபார்மலின் இருப்பதுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று 17 மீன் வகை மாதிரிகளிலிருந்து 10 வகை மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அவற்றிலும் ஃபார்மலின் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஃபார்மலின் கலந்த மீனைச் சாப்பிடும்போது கண்களில் எரிச்சல் உருவாகும். பின்னர் தொண்டையிலும், தோலிலும், வயிற்றிலும் எரிச்சல் உண்டாகும். நீண்ட கால நோக்கில் சிறுநீரகங்களும், கல்லீரலும் பாதிக்கப்பட்டுப் புற்றுநோய் உருவாகும்.
அண்டைய மாநிலமான கேரளாவில் ஃபார்மலின் குறித்த செய்திகள் பரவியதால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுபாட்டு அமைப்பினால் உடனடியாகச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், எந்த வகையிலும் ஃபார்மலின் அனுமதிக்க முடியாது. தூத்துக்குடியில் சில மீன்கள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் ஃபார்மலின் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் சிந்தாதிரிப்பேட்டையிலும் காசிமேட்டிலும் இது போன்ற ஃபார்மலின் பயன்படுத்தப்பட்ட மீன்கள் விற்கப்பட்டது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தொடர்ந்து விசாரித்துவருகிறோம் என்றார். இப்படிப்பட்ட செயல்களை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக