கல்லூரி முதல்வர்களுக்கு 5 ஆண்டுகள் வரை பதவி காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக்குழு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் இதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை 2018இல் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரி முதல்வர்களின் பதவி காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி கல்லூரி முதல்வரின் பதவியானது பேராசிரியர் பதவி அந்தஸ்துக்கு இணையானதாக கருதப்படும்.( இதுவரை பதவி காலம் நிர்ணயிக்கப்படவில்லை. அவருடைய பதவியும் உதவி பேராசிரியருக்கு இணையாகவே கருதப்பட்டு வந்தது) முதல்வரின் பதவி காலமான 5 ஆண்டுகள் முடிவுற்றவுடன் அவருடைய செயல்திறனைப் பொருத்து இன்னொரு 5 ஆண்டுகாலத்திற்கு பதவி காலத்தை நீட்டிக்கலாம்.
கடந்த 2010இல் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பாணைக்கு பதிலாக தற்போதைய அறிவிப்பாணை நடைமுறைக்கு வருகிறது. எனவே அனைத்து பல்கலைக்கழகங்களும் 6 மாத காலத்திற்குள் தங்களது விதிகளை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்புதிய விதிகளின்படி முதல்வருக்கான குறைந்த பட்ச கல்வித் தகுதியாக முனைவர் பட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் முதல்வர் பதவிக்கு 15 ஆண்டு காலம் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 10 ஆண்டு காலம் தேசிய ஆய்வு இதழ்களில் ஆய்வுத்தாள்கள் பதிப்பித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக