மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் இன்று (ஜூலை 23) ஆலோசனை நடத்தினார்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை 109 அடியை எட்டியிருந்த நிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்துவைத்தார்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரிக்கு 80ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்தால் சேலம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நேற்று (ஜூலை 22) விடுக்கப்பட்டது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றே 118 அடியைத் தாண்டி உயர்ந்ததால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று இரவு 8 மணியில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை இன்று எட்டியுள்ளது. இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. 39ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால், 16 கண் மதகுகளில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 8,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக உயர்த்தப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 12 மணிக்கு மேல் 30,000 கன அடியில் இருந்து 40,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குறித்து முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக