டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில், இந்தக் கல்வியாண்டில் சுமார் 10 ஆயிரம் பிஏ படிப்புக்கான இடங்கள் நிரம்பியுள்ளன. தற்போது, மாணவர்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கும் இளங்கலைப் பிரிவாக இது மாறியுள்ளது.
இன்ஜினீயரிங், மருத்துவம் இவற்றைத் தவிர்த்துவிட்டு மேலாண்மை, சமையல்கலை மற்றும் சில குறிப்பிட்ட பிரிவுகளைச் சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்தது. இளங்கலைப் படிப்பைப் பொறுத்தவரை, சில ஆண்டுகளாக அறிவியலுக்கும், சமீபகாலமாக வணிகத்துக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் அளித்து வந்தனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ எனப்படும் இளங்கலைப் பிரிவுக்கு, தற்போது மாணவர்கள் மத்தியில் மதிப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில், இந்த கல்வியாண்டுக்கான சுமார் 10 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேறு வழியே இல்லாமல் பிஏ படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது என்கின்றனர் இதனைக் கற்பித்துவரும் பேராசிரியர்கள். இதுபற்றி ஏசியன் ஏஜ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியிலுள்ள ஸ்ரீ குருநானக் தேவ் கல்சா கல்லூரி முதல்வர் மன்மோகன் கவுர், பிஏ படிப்புக்கான மூன்றாவது கட் ஆஃப் பட்டியலிலேயே பொதுப்பிரிவின் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாகக் கூறியுள்ளார். கமலா நேரு கல்லூரியில் பிஏ படிப்பிற்கான ஒருங்கிணைப்பாளராக உள்ள நிதி பண்டாரி, எதிர்காலத்தில் என்ன படிப்பதென்று முடிவெடுப்பதற்கும், வெவ்வேறு எம்ஏ படிப்புகளைத் தேர்வு செய்வதற்கும் மாணவர்களுக்கு இது உதவியாக உள்ளதென்று தெரிவித்துள்ளார்.
“இந்தப் படிப்பின்போது அவர்கள் இரண்டு முதன்மைப் பாடங்களைத் தெரிந்து கொள்கின்றனர். அதோடு திறமையை வளர்க்கும் பாடங்கள் மற்றும் பொதுப் பாடங்களையும் படிக்கின்றனர். இரண்டு முதன்மைப் பாடங்களில் விரிவான அறிவைப் பெற திறமையை வளர்க்கும் படிப்பானது உதவி செய்கிறது. அதேபோல, முதன்மைப் பாடங்கள் தவிர்த்து இதர படிப்புகளையும் அவர்களால் படிக்க முடியும். கணிதம் மற்றும் சமூகவியல், ஆங்கிலம் மற்றும் அரசியல் அறிவியல் என்று படிப்பதன் வழியாக, அவர்களால் எளிதாகப் போட்டித் தேர்வுகளையும் எழுத முடியும்” என்று கூறியுள்ளார்.
இவர் கூறுவதைப் போலவே, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் விருப்பமுள்ள பல மாணவர்கள் பிஏ படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். கல்லூரிச் சேர்க்கையின்போது, இந்தக் காரணத்தைச் சொல்லியே பிஏ படிப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகச் சொல்கின்றனர் சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக