பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான 1,058 விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதியன்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1,33,567 பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த நவம்பர் 7ஆம் தேதியன்று வெளியானது. விடைத்தாள் மறு மதிப்பீட்டலுக்கு விண்ணப்பித்தபோது, மதிப்பெண் திருத்துதலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டினர் சிலர். இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 11ஆம் தேதியன்று தேர்வு முடிவைத் திரும்பப் பெற்றது ஆசிரியர் தேர்வு வாரியம்.
இதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எழுத்துத் தேர்வில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை எனவும், மதிப்பெண் இடும் பணியில் மட்டுமே மோசடி நடந்துள்ளது எனவும், மீண்டும் மதிப்பெண் திருத்துதல் பணியைச் செய்து முடிவுகளை அறிவித்தல் போதுமானது என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.
தமிழக அரசின் தேர்வு ரத்து உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகக் கூறி உத்தரவிடப்பட்டது. இதே போன்ற வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உண்மை தான் என்று தெரிவித்தது. ஆனால், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரி என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தேர்வு எழுதியவர்கள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, இன்று (ஜூலை 3) நீதிபதிகள் உலுவாடி ரமேஷ் மற்றும் தண்டபாணி அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதியும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியும் வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தனர் நீதிபதிகள். இதனால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்வதாகக் கூறி உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக