முறையாகக் கட்டடம் இல்லாமல் சென்னை புழல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியை இழுத்து மூடவும், அங்குப் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றவும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள புழல் பகுதிக்கு அருகேயுள்ள கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முறையாகக் கட்டடங்கள் கட்டப்படவில்லை என்றும், விதிமுறைகளை மீறி இந்தப் பள்ளி செயல்படுகிறது என்றும், இதுகுறித்து அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்தால், அவர்கள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் சசிகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அமர்வு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, "கும்பகோணம் பள்ளி தீ விபத்தைப் போல மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? கட்டடமே இல்லாத பள்ளியை நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்து விளக்கம் அளிக்க மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அமர்வு முன்பு மீண்டும் நேற்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் ஏ.கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜரானார்கள். இந்தப் பள்ளிக்கு ஏற்கனவே விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த முறையாகக் கட்டடம் இல்லாத தனியார் பள்ளியை இழுத்து மூடவும், அங்குப் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்காத கல்வித் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக