நீரிழிவை எதிர்கொள்வது எப்படி? - டாக்டர் அசீம் மல்ஹோத்ராவுடன் ஓர் உரையாடல் .... இந்தியாவில் நண்பர்கள், உறவினர்கள் என யாரைச் சந்தித்தாலும் நலம்தானா என்பதற்கு அடுத்தபடியாகக் கேட்கும் கேள்வி உங்கள் சுகர் எவ்வளவு, கன்ட்ரோலாக இருக்கிறதா என்பதுதான். அந்த அளவுக்கு அங்கிங்கினாதபடி எங்கும் பிரகாசமாக அனைவரிடமும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு பரவியுள்ளது. தற்போது சர்க்கரை நோய் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீரிழிவை எதிர்கொள்வது எப்படி? - டாக்டர் அசீம் மல்ஹோத்ராவுடன் ஓர் உரையாடல் .... இந்தியாவில் நண்பர்கள், உறவினர்கள் என யாரைச் சந்தித்தாலும் நலம்தானா என்பதற்கு அடுத்தபடியாகக் கேட்கும் கேள்வி உங்கள் சுகர் எவ்வளவு, கன்ட்ரோலாக இருக்கிறதா என்பதுதான். அந்த அளவுக்கு அங்கிங்கினாதபடி எங்கும் பிரகாசமாக அனைவரிடமும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு பரவியுள்ளது. தற்போது சர்க்கரை நோய்


பெரும்பாலான மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாக மாறியுள்ளது. சர்க்கரை நோய்க்காக உணவை மாற்றுவது, அன்றாடப் பழக்க வழக்கங்களை மாற்றுவது, ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை மாற்றுவது என வாழ்வில் சகலத்தையும் ஆக்கிரமித்துள்ளது.

உடலிலுள்ள கணையத்தின் செயல்பாடு மோசமாவதினால் இன்சுலின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரப்பதால் உணவிலிருந்து பிரியும் குளுக்கோஸ் உடலில் பல பாகங்களில் தங்கிக்கொள்ள, பிரச்சினை ஆரம்பிக்கிறது.

உடலில் மென்மையான பகுதிகளில் தங்கும் குளுக்கோஸ் உறுப்புகளைப் படிப்படியாகச் செயலிழக்க வைக்கிறது. அதனால் ஏற்படும், டென்ஷனினால் மறுபடியும் சர்க்கரை அதிகமாவது எனச் சுழற்சி முறையில் சர்க்கரை நோய் தாக்குகிறது. அமைதியான முறையில் கொல்லும் நோய் (silent killer) என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

நீரிழிவை வைத்து வணிகம்

சர்க்கரை நோயினால் ஏற்படும் அச்சத்தைப் பயன்படுத்தி உலகளவில் மிகப்பெரிய வியாபாரமும் நடைபெறுகிறது. சர்க்கரை நோய்க்கென பிரமாண்டமான சந்தையும் உள்ளது. சர்க்கரையைக் குறைப்பதற்கு மாத்திரைகள், இன்சுலின்கள் உணவுகள், செருப்புகள் எனச் சந்தை முழுவதும் சர்க்கரை நோய்க்கான பொருட்கள் ஆக்கிரமித்துவிட்டன.

உலக அளவில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 40 விழுக்காட்டினர் இந்தியாவில்தான் உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. 2017இல் 72 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருந்துள்ளனர். இவர்கள் 2025இல் இரண்டு மடங்காக 134 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசீம் மல்ஹோத்ரா முனைவர் பட்டம் பெற்ற இதய நோய் மருத்துவர். இத்துறையில் 17 ஆண்டுக்கால அனுபவம் பெற்றவர். உணவு முறைகளும் மாறியுள்ள வாழ்க்கை முறைகளும் அதிகமான மக்களுக்கு இந்த நோய் வரக் காரணம் என இவர் கூறுகிறார்.

இரண்டு வகை சர்க்கரை நோய்

சர்க்கரை நோயில் இரு வகை உண்டு. முதல் வகை பிறப்பிலேயே இன்சுலின் குறைபாடு உடையவர்கள். அவர்கள் அன்றாடம் இன்சுலின் ஊசி போட வேண்டும். அது தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். இரண்டாவது வகை சர்க்கரை நோயானது உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் நோயாகும். அதாவது உடலுழைப்பு அதிகமில்லாத பணிகள் செய்வது, சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது, அதிகமான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் உருவாவதுதான் இரண்டாவது வகை.

“இந்த இரண்டாவது வகை குறித்தே ஆய்வு செய்ய முடிவெடுத்தேன். இதில் எங்கு தவறு நடக்கிறது. நிலைமை இந்த அளவுக்குப் போனதற்குக் காரணம் என்ன என்று ஆராயத் தொடங்கினேன். ஆய்வின் முடிவில் பொதுமக்களின் முதல் எதிரி சர்க்கரைதான் என்று உணர்ந்தேன்” என்று கூறும் மல்ஹோத்ரா ‘இந்தியாஸ்பென்ட்’ என்ற இணைய இதழுக்கு அளித்த பேட்டியின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.

நாட்டின் வளர்ச்சியும் நோயின் வளர்ச்சியும்

கேள்வி: இதய நோய்களும் சர்க்கரை நோயும் வாழ்க்கை முறைகளின் நோய்கள் என்றாகிவிட்டன. இதற்கு அதிகமான அளவு சர்க்கரையையும் கார்போஹைடிரேட்களையும் எடுத்துக்கொள்வதுதான் காரணம். இந்த அதிகரிப்பிற்கு இந்தியாவின் சராசரி உற்பத்தி அதிகரித்துள்ளதுதான் காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது நாட்டின் வளர்ச்சியுடன் சோ்ந்து மக்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது என எடுத்துக்கொள்ளலாமா? உணவுகளின் மூலமாக அதிகரித்துள்ள நெருக்கடியைத் தடுத்து நிறுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: இது ஒரு பொய்யான பொருளாதாரமாகும். இது தொடர்பாக மோர்கன் ஸ்டான்லி என்ற ஒரு முதலீட்டு வங்கியின் அறிக்கை கூறுகிறது. அதிகமான சர்க்கரை எடுத்துக்கொள்ளும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாத நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஜீரோ வளர்ச்சிதான். உணவு தொடர்பான நோய்களினால் அவதியுறும் மக்கள் பொருளாதார ரீதியாக உற்பத்திக்கு லாயக்கற்றவர்கள் ஆவார்கள்.

புகையிலைப் பொருட்களுக்கு மேற்கொள்வது போன்று இந்தியாவில் இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டால் அது ஒருவேளை உதவலாம். சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் குறிப்பாக இரண்டாவது வகை சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பிருப்பவர்களிடம் எச்சரிக்கலாம் துரித உணவுகள் சுலபமாகக் கிடைப்பதையும், ஏற்றுக்கொள்ளப்படுவதையும் ஒழுங்குபடுத்தலாம். இது போன்ற உணவுப் பொருட்கள்மீது சுகாதார எச்சரிக்கைகளையும் ஒட்டலாம்.

இரண்டாவது வகை சர்க்கரை நோயானது நகர ஏழைகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் என்று எதை நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன தீர்வுகளை முன்வைத்துள்ளீர்கள்?

பாரம்பரிய உணவானது மாற்றப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் முக்கியமாக சுகர் பானங்களும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைடிரேட்டுகளும் மலிவான விலைக்குக் கிடைக்கின்றன. ஆனால், அவற்றில் சத்து இருப்பதில்லை. இதுதான் சர்க்கரை நோய் அதிகரிப்புக்குக் காரணம். தீர்வுகளைப் பொறுத்தவரை நான் மேலே குறிப்பிட்டதுதான்.

இந்தியாவில் சர்க்கரை நோயாளி ஒவ்வொருவரும் தன் சிகிச்சைக்கென ஆண்டுக்குச் சராசரியாக 27,400 ரூபாய் செலவு செய்கிறார். இது 2025இல் ஆறு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மருந்துகளிலிருந்து விலகி, நோயைக் குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ மாற்று சிகிச்சை முறைகள் உள்ளனவா?

இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது கார்போஹைட்ரேட்டுகளை ரத்தத்தில் கரைத்துக்கொள்ள முடியாத தன்மையாகும். அதனால் மருந்துகளின் மூலமாக ரத்தத்திலுள்ள குளுகோஸைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பில்லியன் கணக்கில் சிகிச்சைக்காக செலவழிக்கப்படுகிறது. ஆனால், நோயாளியைக் குணமாக்குவதில் சிகிச்சை சிறப்பாகச் செயல்படுவதில்லை. அமெரிக்காவில் அவசர சிகிச்சை அறைக்கு 1,00,000 முறையாவது வர வேண்டியுள்ளது. இவர்கள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வருபவர்கள் அல்ல. மருந்துகளின் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வருபவர்கள். இந்தியாவில் இது கூடுதலாக இருக்கும் எனச் சந்தேகிக்கிறேன்.

மாற்று சிகிச்சை முறைகளினால், குறிப்பாக உணவை மாற்றுவது, ஸ்டார்ச் கார்போஹைடிரேட்டுகளையும் சர்க்கரையையும் உணவுப் பட்டியலிருந்து நீக்குவது ஆகியவை உடலிலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்துள்ளது. இதை நான் என்னிடம் நோயாளிகளாக வருபவர்களிடம் பார்த்துள்ளேன்.

ஏப்ரலில் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் ஆரோக்கியமான உணவு என்று ஓர் உணவுப் பட்டியலை பகிர்ந்துள்ளது. அந்தப் பட்டியலில் வெஜிடேரியன் உணவுகள் மட்டுமே உள்ளன. முட்டைகளோ, இறைச்சி சார்ந்த உணவுகளோ இல்லை. இது கொள்கை முடிவெடுப்பவர்களுக்கும் சுகாதார நிபுணர்களுக்கும் இடையே உறவு இல்லை என்பதைக் காட்டுகிறதா?

முதலாவது இது அமைச்சகத்தின் மிகப் பெரிய தவறான ஆலோசனையாகும். சத்துணவும் மருந்துகள் போன்று தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் துறையாகும். மருந்துகள் குறித்த கல்வி நிறுவனத்தின் தந்தை என அழைக்கப்படுகின்ற பேராசிரியர் டேவிட் சாக்கெட் முன்பு ஒருமுறை கூறினார், நீங்கள் என்ன படிக்கிறீர்களோ அது ஐந்து ஆண்டுகால மருத்துவப் படிப்பை முடிப்பதற்குள் மாறிவிடும். நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை யாரும் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப் போவதில்லை என்பதுதான் பிரச்சினை.

இறைச்சி சாப்பிடுவதால் கொழுப்பு கூடி இதய நோய் வந்துவிடும் என்று அமைச்சகம் கூறுவதெல்லாம் காலாவதியாகிப்போன அச்சம். இதுகுறித்து பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் மெடிசன் இதழ் இந்த வகை அச்சங்களை மறுத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளது. இந்தக் கட்டுரையை நானும் இணை ஆசிரியராக இருந்து எழுதியுள்ளேன். இந்த இதழானது உலக இதய நோய் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முட்டை சாப்பிட்டால் கொழுப்பு கூடும் என்பதெல்லாம் தவறான புரிதலாகும். இது முழுமையான பொய்யாகும். 2015இல் அமெரிக்காவின் உணவுத் துறை முட்டை என்பது கொழுப்புச் சத்தை அளிக்கும் என்பதை நீக்கிவிட்டது.

மத நம்பிக்கை காரணங்களால் வெஜிடேரியன் உணவுகள் குறித்து இதுபோன்ற வழிகாட்டுதல்கள் அளிக்கப்படலாம். இறைச்சி உணவை அறிவியல் அற்ற தகவல்களுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது.

அதற்கு மாறாக, வெஜிடேரியன் உணவுகளான பிரெட் மற்றும் அரிசி உணவுகளை சர்க்கரையோடு அதிகமாகச் சாப்பிட்டால் அது சத்தின்மையை உருவாக்குவதோடு, நீரிழிவு உருவாவதற்கும் அதிகமாகப் பங்களிக்கும்.

சுகாதாரம் குறித்த இத்தகைய தவறான தகவல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு நமக்குள்ள பெரிய ஆயுதம் வெளிப்படைத்தன்மையாகும். இத்தகைய ஆலோசனைகளை வழங்கும் அமைப்புகளுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். தகவல்களுக்கான ஆதாரங்களை வெளியிடும்படி கோர வேண்டும்.

மத்திய அரசு இலவச யுனிவர்சல் கேர் என்ற மருத்துவத் திட்டத்தை அறிவித்துள்ளது. மோடி கேர் என்றழைக்கப்படும் அந்தத் திட்டத்தில் 2020இல் 50 கோடி மக்கள் ஆரோக்கியம் அடைவது இலக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தில் செயல்படும் நேஷனல் சுகாதார அமைப்பிலிருந்து எதையும் இந்தியா கற்றுக்கொள்ளவில்லையா?

இந்தியா இங்கிலாந்தின் சுகாதார அமைப்பிலிருந்து எதிர்மறையான முக்கியப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் சுகாதார அமைப்பானது நோய் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும்தான் அதிக கவனம் செலுத்துகிறது. நோய்த் தடுப்பு, வாழும் முறைகளில் மாற்றத்தைக் கொண்டுவருவது ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுவதில்லை.

வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் நோய்த்தடுப்பை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாகவே இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், இரண்டாவது வகை சர்க்கரை நோய் ஆகியவற்றைத் தடுக்க முடியும் நவீன மருந்துகள் மூலமாக அல்ல.

மருந்துகள் தயாரிப்பில் உள்ள வணிக சக்திகள் இறைச்சி சாப்பிடுவதால் இரண்டாவது வகை சர்க்கரை நோயும் அது தொடர்பான நோய்களும் அதிகமாகப் பரவின என்று அச்சுறுத்தின. இந்த விஷயத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளிலும் சுகாதாரப் பராமரிப்புத் தொழிலிலும் எப்படி வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது?

மக்களுக்கு ஆரோக்கியம் தொடர்பாக பாரபட்சமான தகவல்கள்தான் அறிவுரையாக வழங்கப்படுகின்றன. இதுதான் இரண்டாவது வகை சர்க்கரை நோய் அதிகமாவதற்கும் அதனால் நெருக்கடி ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன. உணவுத் தொழிற்சாலைகள் லாபத்தைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்வார்கள், உங்களின் நலத்தைப் பற்றி அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது மருந்துக் கம்பெனிகளுக்கும் பொருந்தும். அவர்கள் நோயாளிகளுக்கும் அறிவியலாளர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும்தான் பொறுப்பாக இருக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்கு மாறாக லாப நோக்கத்திற்காக தொழிற்சாலைகளுடன் கூட்டுச் சேருவதுதான் உண்மையான ஊழலாக நடந்துகொண்டிருக்கிறது.

கடந்த மே மாதத்தில் லண்டன் நகரத்தின் மேயர் போக்குவரத்து வாகனங்களில் துரித உணவு விளம்பரங்கள் மேற்கொள்வதற்குத் தடை விதித்தார். அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? மற்ற நாடுகளின் அரசுகள் இது போன்ற உடனடியான நடவடிக்கைகள் எடுக்குமா?

நிச்சயமாக மற்ற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் சுகர் பானங்களைக் குடிப்பது நீண்ட கால நோய்களுக்கு முக்கியமாகப் பற்கள் சிதைவுக்குக் காரணமாக உள்ளது.

நன்றி: இந்தியாஸ்பென்ட்

தமிழில்: சேது ராமலிங்கம்

நேர்காணலின் அடுத்த பகுதி நாளைக் காலை 7 மணிப் பதிப்பில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here