மாணவியின் கல்விக் கடன் வழக்கு நாளை விசாரணை! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாணவியின் கல்விக் கடன் வழக்கு நாளை விசாரணை!

தந்தை கடனை திருப்பிச் செலுத்தாததால் மகளுக்குக் கல்விக் கடன் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து, தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, நாளை (ஜூலை 4) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் தந்தை ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் உள்ளார் என்று வங்கி நிர்வாகம் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பதிலை ஏற்ற நீதிபதி மாணவிக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து, பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீபிகா மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவி தீபிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது தந்தைக்கு எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லாத நிலையில் வங்கி நிர்வாகத்தின் தவறான பதிலை ஏற்றுத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

மேலும், தவறான தகவல் அளித்து தன்னுடைய தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்தற்காக நஷ்ட ஈடாக 10 லட்சம் வழங்கப் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கக்கோரி மாணவி தீபிகா தரப்பு வழக்கறிஞர் விஜேந்திரன், நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here