18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் துவக்க விழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய போட்டிகளை இந்த ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்தா, பலெம்பங் ஆகிய இரு நகரங்கள் இணைந்து நடத்தவுள்ளது. இன்று (ஆகஸ்ட் 18) நடைபெறும் துவக்கவிழா நிகழ்ச்சியில் இந்தோனேசிய புகழ் அங்கன், ரைசா, துலுஸ், புத்ரி ஆயு, வியா வாலேன் உள்ளிட்ட பாடகர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இதனையடுத்து 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடக்கும்.
இந்திய குழுவுக்கு காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கிச் செல்கிறார். வடகொரியாவும், தென்கொரியாவும், குளிர்கால ஒலிம்பிக்கை தொடர்ந்து இந்தப் போட்டியிலும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து செல்ல இருப்பது சிறப்பம்சமாகும். இந்தத் தொடரில் மொத்தம் 40 விளையாட்டுகளில் இந்தியா 36 விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ளது. இதில் இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
கபடி மற்றும் ஆண்கள் ஹாக்கியில் இந்தியா தங்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. இதனைத் தவிர இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சுஷில் குமார், நீரஜ் சோப்ரா, ஹிமா தாஸ், மானு பாகெர், பி.வி.சிந்து, வினேஷ் போகத், விகாஷ் கிருஷ்ணன், சர்ஜூபாலாதேவி, தீபா கர்மாகர், மானிகா பாத்ரா ஆகியோரிடமிருந்தும் தங்கப் பதக்கங்களை எதிர்பார்க்கலாம்.
இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் துவக்க விழா நிகழ்ச்சி சோனி நெட்வொர்க் சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக