பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக இம்ரான் கான் இன்று (ஆகஸ்ட் 18) காலை பதவி ஏற்றுக்கொண்டார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரு தினங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக அமைந்தாலும், அதற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அவருக்கு தேவைப்பட்ட 172 வாக்குகளை விட கூடுதலாக 4 வாக்குகள் கிடைத்தன. எனவே அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 10.45 மணியளவில் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில் இம்ரான் கானுக்கு அதிபர் மம்னூன் உசைன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் சட்ட மன்ற சபாநாயகர் அசத் குவைசர், ராணுவத் தலைவர் ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா, விமான படை தளபதி மார்ஷல் முஜாகித் அன்வர் கான் மற்றும் கடற்படை தலைவர் ஸாபர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பஞ்சாப் மாநில அமைச்சரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இதில் பங்கேற்றார். தான் ஒரு அரசியல்வாதியாக இங்கு வரவில்லை என்றும் இம்ரான் கானின் நண்பராக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் அவரது மத ஆலோசகரும், 3ஆவது மனைவியுமான புஷ்ரா மனேகா பங்கேற்றார்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக