2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும்!
நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியிருந்ததை, மத்திய அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீட் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், “அடுத்த வருடம் முதல் (2019) நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும். மேலும் அனைத்துத் தேர்வு முறையும் கணினி மயமாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், பிரகாஷ் ஜவடேகரின் கருத்தில் மாறுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதனால் அதிக அளவில் அவதியுறுவார்கள். மேலும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் பிப்ரவரி மாதம் தான் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர் கொள்வார்கள்.
அதனால் அவர்களால் நீட் தேர்வை முழுக்கவனத்துடன் எழுத இயலாது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தக் கூடாது. 2019ஆம் ஆண்டில் நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டும் நடைபெறும். அத்தேர்வு ஆன்லைன் முறைக்குப் பதிலாக, தேர்வு மையங்களில் வழக்கமான பேப்பர்-பேனா முறையிலேயே நடத்தப்பட வேண்டும்" என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து, மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் முறையில் இல்லாமல் வழக்கமான முறையிலே நீட் தேர்வு நடத்தப்படும் என்று இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான பதிவுகளைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக