- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

எம்பிபிஎஸ்: நான்கு பேருக்கு மட்டுமே இடம்!


நடப்பாண்டில் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.


நீட் எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையிலே, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே, எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு, அரசுப் பள்ளியில் படித்த 2 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததை ஒப்பிடும்போது, தற்போது 80 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இது மாநிலத் தேர்வுக் குழுவினால் வெளியிடப்பட்ட தரவு மூலம் உறுதி செய்யப்பட்டது.

2016ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வு இல்லாதபோது, 12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்தது. அப்போது, அரசுப் பள்ளியில் படித்த 30 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் தற்போது அந்த எண்ணிக்கை 4ஆக குறைந்துள்ளது. ஆனால், நடப்பாண்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

நாடு முழுவதும், கடந்த மே 6ஆம் தேதி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், வெறும் 35.99 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவி கீர்த்தனா மட்டும் 720 மதிப்பெண்களுக்கு 676 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் 12ஆம் இடம் பிடித்தார்.

நீட் தேர்வில் தமிழ் கேள்வித்தாளில் மொத்தம் உள்ள 180 கேள்விகளில் 49 கேள்விகள் தவறாக உள்ளதாகவும், நீட் தேர்வு எழுதிய தமிழ்வழி மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கல்வியாளர் ராம்பிரசாத் தெரிவித்திருந்தார். தமிழ்வழி மாணவர்கள் நிறையபேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனதற்குக் கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

நீட் தேர்வு தொடர்பாக, தேர்வுக்குழுச் செயலாளர் ஜி. செல்வராஜன் தெரிவிப்பதாவது, " 2018ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டவர்களில் பாதி மாணவர்கள் நடப்பாண்டில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்ல. 2017ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 1680 மாணவர்களும், 2016ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற 120 மாணவர்களும், தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

ஒரு ஆண்டு இடைவெளி விட்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களில் 51 சதவீத மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்துள்ளனர். எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வை இரண்டு முறை எழுதும் வழக்கம் தற்போது உருவாகியுள்ளது" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here