விருதுநகர் மாவட்டம் சிவகாசி கணேசன் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரலட்சுமி. தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிவரும் இவர் கடந்த 25ஆம் தேதி காலையில் பணி தொடர்பாக வெளியே சென்றுள்ளார். மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய சுந்தரலட்சுமி, கதவு திறந்திருப்பதுடன், பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துள்ளார். பீரோவில் வைத்திருந்த வைர நெக்லஸ், வைரக் கம்மல், தங்க நகைகள் ஆகியவையும் ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரமும் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, திருத்தங்கல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரணை நடத்திக் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
இதற்கிடையே திருத்தங்கல் போலீசார் சிவகாசி – விருதுநகர் சாலையில் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது சந்தேகம் அடைந்து அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கண்ணன்குமார், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அக்பர் அலி ஆகிய அந்த இருவரும் தலைமை ஆசிரியை சுந்தரலட்சுமி வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் விருதுநகர் பாண்டியன் நகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், திருத்தங்கல் எனப் பல்வேறு ஊர்களில் வீடு புகுந்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
அவர்கள் வைத்திருந்த 52 பவுன் நகைகள் மற்றும் ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
பின்னணி என்ன?
கைதான கண்ணன்குமார் சென்னை எண்ணூரில் 2008இல் போலீஸ்காரராகப் பணியாற்றிவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
அவர் சிறையில் இருந்தபோது, திருட்டு வழக்கு தொடர்பாகச் சிறையில் இருந்த அக்பர் அலியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கூட்டணி அமைத்துக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக