சென்னைக்கு `ஹேப்பி பர்த் டே'!
வந்தாரை வாழ வைக்கும் சென்னை இன்று 379ஆவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. சென்னையின் பிறந்த நாளை ஒட்டி இந்த நகரம் பற்றிய சுருக்கமான நினைவுகூரல்...
சென்னை தினம் உருவான நாள்
தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமே இந்த சென்னை தினம். இந்நாள் 2004ஆம் ஆண்டில் இருந்து நினைவுகூரப்பட்டுவருகிறது.
சென்னையின் பெருமைகள்
தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் நான்காவது பெரிய நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என பல பெருமைகளைக் கொண்டது சென்னை. பலமொழிகளைப் பேசும் மக்கள் வாழ்வதால், பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாச்சாரம் உள்ளது. ஒடிசா, கேரளா, பெங்களூரு, மங்களூர், ஆந்திரா வரையில் இதன் எல்லை இருந்தது. 1997ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி 'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என்று மாற்றினார்.
சென்னையின் மக்கள் தொகை
30,000 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை, தற்போது 8.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பெருநகரமாக மாறியுள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அதன் பரப்பளவும் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே செல்கிறது.
வேலைவாய்ப்பு, கல்வி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் வசிப்பவர்களும் வேலை தேடி சென்னையை நோக்கிப் படை எடுத்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை அளிப்பதில் சென்னை முக்கிய இடம் வகிக்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி, அண்ணா பல்கலை உள்ளிட்டவை சென்னையின் சிறப்பு. கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவை சென்னையின் அறிவுக் கண்கள்.
சென்னையின் முக்கிய அடையாளங்கள்
இத்தகைய பெருமைக்குரிய சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று புனித ஜார்ஜ் கோட்டை. கிழக்கிந்திய கம்பெனியின் தென்மண்டல வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோரின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் வாங்கப்பட்டதுதான், இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை. தற்போது தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சட்டமன்றம் அமைந்திருக்கும் இடமாகவும், தலைமைச் செயலகமாகவும் இருந்துவருகிறது.
சென்னையின் மிகப் பழமைமிகு அடையாளங்களில் ஒன்றாக எழும்பூர் அருங்காட்சியகம் திகழ்கிறது. 1851ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் இது. இங்கு தொல்லியல், நாணயவியல், பண்டையக் காலச் சிலைகள், படிமங்கள், போன்ற சேகரிப்புகள் அரிதானவை.
சென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்துக்கு மாற்றாக, 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம், ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாகும். ஒரு நாளைக்கு 4,800 பேருந்துகள் வரை இந்த நிலையத்துக்கு வந்து செல்கின்றன. நாள் ஒன்றிற்கு ஐந்து லட்சம் பேர் வரை இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
சென்னையின் பெருமை மிகு அடையாளங்களில் மற்றொன்று மெரினா கடற்கரை. 13 கி.மீ. நீளம் கொண்ட இந்த கடற்கரையே உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும். மணற்பாங்கான இந்த அழகிய கடற்கரை சென்னை மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக உள்ளது.
இப்பகுதியில்தான் கலங்கரை விளக்கம், அண்ணா சமாதி, மற்றும் நினைவகம், எம்.ஜி.ஆர். சமாதி, ஜெயலலிதா சமாதி, கருணாநிதி சமாதி, உழைப்பாளர் சிலை மற்றும் நினைவில் நீங்காத இடம் பிடித்த பலரின் சிலைகள் உள்ளன.
பெருமைமிகு அடையாளமான குஜிலிப் பாடல்கள்
இதுதான் சென்னையின் பூர்விகப் பாடல் என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. சென்னையின் சிறப்பு என பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், அதன் இசை என்றால் கானா பாடல்கள்தான் என இன்றைய தலைமுறைக்குத் தெரியும். ஆனால், குஜிலிப்பாடல்களும் சென்னையில் சிறப்புற்று திகழ்ந்துள்ளது.
விடுதலைப் போராட்டம் மேலோங்கிய நேரத்தில், புரட்சிக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல குஜிலிப்பாடல்களே பயன்பட்டன. இதில் கடும் கோபமுற்ற ஆங்கிலேயர்கள், ஒரு கட்டத்தில் குஜிலிப்பாடல்களுக்கு தடை விதித்துள்ளனர். குஜிலிப்பாட்டு பாடியவர்கள், பாட்டுப்புத்தகங்கள் வைத்திருந்தவர்கள் என ஏராளமான பாமரர்கள் கைதாகினர்.
குஜிலி என்றால் தவறான பொருள் என எண்ணிக் கொண்டு, அதன் பெயரைக் கூட சொல்ல மறுக்கிறோம். நீண்ட மற்றும் பெருமைமிக்க குஜிலிப்பாடல்களை மீட்டு, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல, இந்த 379ஆவது சென்னை தினத்தில் உறுதி ஏற்போம்.
சிங்காரச் சென்னையைப் புகழ்ந்து திரையுலகில் பல திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் மூலம் வந்தாரை வாழவைக்கும் சென்னையைப் புகழ்ந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக