கர்நாடகாவிலுள்ள அணைகளில் இருந்து அதிகளவில் நீர் திறந்துவிடப்படுவதால், நடப்பாண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக முழுகொள்ளவை எட்டியுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த பெருமழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பி, அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பின் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், நீர்மட்டம் குறைந்தது.
அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கடந்த 11ஆம் தேதி மேட்டூர் அணை மீண்டும் அதன் கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில், ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று(ஆகஸ்ட் 21) எட்டியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 120.21 அடியாக உள்ளது.
இதையடுத்து, அணைக்கு நொடிக்கு 75,000 கன அடி நீர் வரும் நிலையில் 60,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் இருப்பு 92.8 டிஎம்சியாக உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததால், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர், காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக