கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு கல்லூரியிலும் சிறப்பு விருந்தினர்களை வரவழைத்து விழா நடத்தி அவர்களுக்குப் பட்டம் கொடுப்பது வழக்கம். ஆனால், தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்குப் பதிலாக பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோரை மேடையேற்றி பட்டம் பெறும் மாணவர்கள், தங்கள் பெற்றோரின் காலில் விழுந்து வணங்கி அவர்கள் கையாலேயே பட்டத்தைக் கொடுக்க வைத்தனர். இதில் பல பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர்விட்டது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
தஞ்சாவூர் அருகே உள்ளது தனியார் கல்லூரியான கிங்க்ஸ் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் 13-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதற்காகச் சிறப்பு விருந்தினர்கள் யாரையும் அழைக்கவில்லை. இங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கொடுத்து, இதில் கட்டாயமாக அனைவரின் பெற்றோர்களையும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டார்கள். கல்லூரி முதல்வர், பேராசிரியர் மற்றும் ஒரு மாணவி என அனைவரும் குத்து விளக்கு ஏற்ற நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் பட்டம் பெறும் மாணவர்களின் பெயர்கள் வரிசையாக அறிவிக்க அந்த மாணவர்கள் மேடையின் ஒரு வழியிலும் பெற்றோர்கள் மற்றொரு வழியாகவும் மேடைக்கு வந்தனர். பின்னர், கல்லூரி தரப்பில் பட்டம் பெறும் சான்றிதழ்களைப் பெற்றோர் கையில் கொடுத்துவிட மாணவர்கள் பெற்றோரின் காலில் விழுந்து வணங்கி அப்பா அம்மா கையாலேயே பட்டத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். இதுபோல் இங்கு படித்த 370 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகையில்,``நான்கு ஆண்டுக்காலம் படாத கஷ்டமெல்லாம் பட்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். மாணவர்கள் பட்டத்தை வாங்கிக்கொண்டு வீட்டில் போய் அம்மா நான் பட்டம் வாங்கிட்டேன் எனச் சொன்னாலே, அவர்கள் அடைகிற மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அவர்களையே தங்கள் பிள்ளைகளுக்குப் பட்டம் கொடுக்க வைப்பது பெற்றோர்களுக்குச் செய்கிற மரியாதையாக இருக்கும். கல்லூரி தொடங்கப்பட்டதிலிருந்து இதுபோல்தான் செய்கிறோம். தங்கள் பிள்ளைகளுக்குப் பட்டத்தைக் கொடுத்ததும் பெற்றோர்கள் பலர் மேடையிலேயே ஆனந்தக்கண்ணீர்விட்டு அழுதனர். பலர் பெருமை பொங்கத் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து நா தழுதழுக்க வாழ்த்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்றார்.
பட்டம் பெற்ற மாணவர் ஒருவரிடம் பேசினோம்.``பெற்றெடுத்து ஆளாக்கி கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர் பெற்றோர். சிறப்பு விருந்தினர் கையால் பட்டம் பெறுவதைவிட, அப்பா அம்மா கையாலேயே பட்டம் பெற்றது மகிழ்ச்சியாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கிறது" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக