*மருத்துவம் முடித்தும் படித்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ரஜினி!* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*மருத்துவம் முடித்தும் படித்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ரஜினி!*

பள்ளியில் படித்து முடித்து, மருத்துவர் ஆன பிறகும் நன்றி மறக்காமல், தான் படித்த தொடக்கப்பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தி, நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திக்கொண்டிருக்கிறார் ரஜினி கலையரசன் என்ற மருத்துவர். அவரின் சேவை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இதுதொடர்பாக, மருத்துவர் ரஜினி கலையரசனிடம் பேசினோம். ``ஆம். இந்த மனிதச் சமூகத்தில்தான் எத்தனை அதிசய ஆச்சர்யங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு நடத்துநராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த், எப்படி சூப்பர்ஸ்டார் ஆகி ஆச்சர்யப்படுத்தினாரோ, அதுபோல, நான் மருத்துவராகி அதிசயப்படுத்தியுள்ளேன். ஆனால், இந்த மருத்துவர் ரஜினி கலையரசன் பட்ட கஷ்டம்தான் கொஞ்சம் அதிகம்.

இந்த ரஜினி கடந்து வந்த வலிகள் மிகுந்த பாதை, இல்லை...இல்லை, அதிசயங்கள் நிறைந்த பாதை. ஆறு வயதில் தந்தையையும், தாயையும் இழந்துவிட்டு, நடுத்தெருவில் வந்துநின்ற எனக்கு உறவுகள் இருந்தும், உறவென்று சொல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், இரவில் படுத்துறங்க மட்டும் சித்தப்பா (முனியப்பா) வீட்டுத் திண்ணையில் இடம் கிடைத்தது. அது கடவுள் கொடுத்த வரமா. இல்லை...இல்லை, பாட்டி லட்சுமியம்மாளின் ஆதரவு. இந்த நிலைக்குக் காரணம், என் தந்தை லட்சுமணனும், தாய் ஜம்புவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதுதான். அப்பா, அம்மாவின் காதல் திருமணத்தை, தாத்தா-பாட்டி மற்றும் சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குப் பிடிக்கவும் இல்லை. இதனால் எப்போதும் வீட்டில் சண்டைதான். ஒரு கட்டத்தில் அப்பா லட்சுமணன் மர்மமாகவே இறந்துவிடுகின்றார். அப்பா இறந்தவுடன் தாய் ஜம்புவை அடித்தே வீட்டைவிட்டு விரட்டி விடுகின்றனர். ஆறு வயதான என்னை அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பி விட்டாள் அம்மா.

அன்றுமுதல் எனக்கு உறவுகள் இருந்தும், ஒரு அநாதையாகத்தான் வளர்ந்தேன். சித்தப்பாவின் வீட்டில் தோட்ட வேலையும், மாட்டைப் பிடித்துக் கட்டுவதுமாக, நாள்கள் நகர்ந்தன. பிறகு உத்தனப்பள்ளியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் பாட்டி லட்சுமியம்மாள் சேர்த்து விட்டார். அப்போது முதல் எனக்கு வீட்டில் கிடைக்காத அன்பும், அரவணைப்பும் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்து கிடைத்தது. அதற்காகவே நாள் தவறாமல் பள்ளிக்குச் சென்றுவிடுவேன். என்னுடைய பல ஆசிரியர்களை இன்றுவரை அப்பா, அம்மா என்றுதான் அழைக்கின்றேன். அவர்களும் மறுக்காமல் `வாடா செல்லம்' என்றுதான் அழைக்கிறார்கள். அதுதவிர, அப்போது எனக்குப் பள்ளியில் முக்கியமாக மத்திய உணவு கிடைத்தது. ஆம்...சரியான உணவுகூட இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் வழியிலும், பள்ளியிலும் மயக்கம் போட்டு விழுந்த நாள்களும் உண்டு. அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரியாது நான் எந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கு வருகின்றேன் என்று... காரணம், எனக்குள் ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் பள்ளியில் அனைவருடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் நாளடைவில் என்னுடைய மயக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடித்த ஆசிரியர்கள், என் பின்னணியை அறிந்துகொண்டு உதவத் தொடங்கினர்.

எனக்கு மட்டும் காலையில் 10 மணிக்கு எல்லாம் சாதம் வடித்ததும், சாதமும் வேகவைத்த பருப்பும் போட்டுத் தருவார்கள். இதுதான் எனது காலை உணவு. பிறகு மதிய உணவைப் பள்ளியில் சாப்பிட்டு விடுவேன். அதையே இரவில் சாப்பிடவும் கொடுத்து அனுப்புவார்கள். அதை வீட்டுக்குக் கொண்டுபோய் இரவு சாப்பிட முடியாது. வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள் என்று பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் சாப்பிட்ட பின்னரே வீட்டுக்குச் செல்வேன். இப்படியாக 5-ம் வகுப்பு வரை படித்து முடித்தேன்.

படிப்பின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு, ஆசிரியர்களே என்னை 6-ம் வகுப்பில் சேர்த்து விட்டனர். 8-ம் வகுப்பு முடித்தவுடன், மே மாத விடுமுறையில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர்ந்து, ஏரி சீரமைக்கும் வேலைக்குச் சென்றேன். அதில் கிடைத்த பணத்தைச் சேமித்து வைத்து 9-ம் வகுப்பில் சேர்ந்தேன். மீண்டும் சனி, ஞாயிறுகளில் வேலைக்குச் சென்றேன். அப்போது, `நீ படித்தது போதும்; தோட்டத்தில் வந்து வேலை பாரு' என்று சித்தப்பாவும், சித்தியும் நெருக்கடி தந்தார்கள். ஆனால் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்து இருந்ததால், என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். பாட்டி லட்சுமியம்மாளும் `மகன் (சித்தப்பா) சொல்வதுதான் சரி' என்று என்னைக் கைவிட்டு விட்டார்.

அப்போது, எனக்கு ஆதரவு கொடுத்தது சக மாணவி பிரேமா. நான் வாழ்நாள் முழுவதும் தோழி பிரேமாவுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஆம். நான் 9 மற்றும் 10-ம் வகுப்புவரை படித்து முடிக்க, எனக்காக அவரது அப்பாவிடம் பேசி இரண்டு வருடம் அவரது வீட்டில் தங்கிப் படிக்க இடம் கொடுத்தார். பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண் எடுத்தேன். மீண்டும் ஆசிரியர்கள் உதவியால் ஒசூரில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பேசி இலவசமாக தங்கிப் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். பள்ளி நிர்வாகமும் என் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு இரண்டு வருடங்கள் இலவசமாக விடுதியில் தங்கிப் படிக்க உதவி செய்தார்கள். முக்கியமாகப் பள்ளியின் முதல்வர் சம்பத்குமார் சாருக்கு நன்றி சொல்லவேண்டும்.

தனியார் பள்ளி என்பதால் மாதந்தோறும் பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடக்கும். என் சார்பாக, என் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் கூட்டத்துக்கு மாதம் ஒரு ஆசிரியர் என வந்து கலந்துகொள்வார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் கடைக்குச் செல்லும்போது பேப்பர், பேனா, பென்சில் தீர்ந்து இருக்கும் என்று வாங்கி வந்து தருவார்கள். என்னுடைய ஆசிரியர்களின் உதவியால் அவர்கள் எதிர்பார்த்தது போலவே ப்ளஸ்-டூ தேர்வில் 1,166 மதிப்பெண் எடுத்தேன். மெடிக்கல் கட்-ஆப் 198.25 எடுத்தேன். ஆனால், எனக்கோ பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். அப்போதுதான் ஆசிரியர்களுடனேயே இருக்க முடியும் என்று முடிவு செய்திருந்தேன். `மருத்துவம் வேண்டாம்' என்றும் `முடியாது' என்றும் எவ்வளவோ போராடிப் பார்த்தேன். ஆனால், என்னுடைய ஆசிரியர்கள் விடவில்லை. `மருத்துவப் படிப்பு படித்தே ஆக வேண்டும்' என்று என்னை முதல்முறையாக அடிக்கவும் செய்தனர். அன்பின் மிகுதியால், அவர்களே விண்ணப்பம் வாங்கி வந்து என்னை மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டனர். ஆனால், மருத்துவம் படிக்கவும், கட்டணம் செலுத்தவும் வசதி இல்லை. அப்போது நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் சார் உதவி செய்தார். கலெக்டர் கொடுத்த உதவித் தொகையை என்னுடைய பேராசிரியர் சுனிதா, எனக்குத் தேவையானபோது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்ததுடன், அவருடைய காசையும் சேர்த்து என்னை மருத்துவர் ஆக்குவதற்கு உதவி செய்தார்.

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தேன். `எங்கே போவது...?' என்று தெரியாமல் பிறந்த ஊரான கோவிந்தாபுரம் வந்தேன். ஆனால், சித்தப்பாவின் மகன்களோ, `சொத்து, கித்துன்னு வந்தா ஒரே வெட்டு... உயிரோடு இருக்க மாட்டே' என்று மிரட்டி அனுப்பினார்கள். அதனால், நண்பர்கள் உதவியுடன் அலேசிபம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினேன். நான் படித்த உத்தனப்பள்ளியில் சிவபிரகாஷ் என்ற பெயரில் கிளினிக் வைத்தேன். என்னைத் தேடி வரும் ஏழை மக்களுக்கு என்னால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைவான கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வருகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் எனக்குத் தேவையான உடைகளை உள்ளூர் கடைகளில் வாங்கினேன். பிறகு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், துணிகளை வைக்கப் பீரோ, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் போன்றவற்றை வாங்கியுள்ளேன்.

மருத்துவத்தில் எம்.டி படிக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக, நுழைவுத் தேர்வு எழுத இரவு நேரத்தில் படித்து வருகின்றேன். இந்தச் சமயத்தில்தான், கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்த உடன், என்னுடைய ஆசிரியர் கனவை நிறைவேற்றிக்கொள்ள நான் படித்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசி 5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தி வருகின்றேன். மருத்துவத்தில் கிடைக்காத நிம்மதி ஆசிரியராக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது எனக்குக் கிடைத்தது.

இதற்காகத் தினமும் காலை 9 மணிக்கெல்லாம் பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்குத் தமிழ் அல்லது அறிவியல் வகுப்பு பாடம் நடத்தி முடித்துவிட்டு, பிறகு எனது கிளினிக் வந்து மருத்துவம் பார்க்கிறேன்" என்று கூறிய ரஜினி கலையரசனிடம் `ரஜினி' என்ற பெயர் எப்படி வந்தது, என்று கேட்டோம்.

``தாய், தந்தை வைத்த பெயர் கலையரசன். பிறகு எனக்குப் பிடித்த பெயரான ரஜினியின் பெயரை முன்னால் சேர்த்துக்கொண்டு ரஜினி கலையரசன் என்று மாற்றிக்கொண்டேன். ஆனால், எனக்கு என்று முகவரி கிடையாது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் உதவியால் கல்லூரி விடுதி முகவரியை வைத்து, ஆதார் கார்டு பெற்றுள்ளேன். இனிதான் எனக்கான முகவரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்கவேண்டும். நான் படித்த மருத்துவப் படிப்பைப் பதிவுசெய்ய வேண்டும்" என்றார் ரஜினி கலையரசன்.

``கடவுள் நம்பிக்கை உண்டா?" என்றோம். "கடவுள் நம்பிக்கை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், படிக்கும்போது அழகாகப் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று நெற்றியில் குங்குமம் அல்லது விபூதி வைத்துக்கொண்டு செல்வேன்" என்ற ரஜினி கலையரசனிடம் பேசி முடித்தபோது, ஏனோ, அவரை எளிதில் கடந்து செல்ல முடியாமல் மனம் தவித்தது.

ஆனால் ஔவையார் பாட்டி பாடிய, `கொடிது, கொடிது இளமையில் வறுமை கொடியது' என்ற வரிகளின் வலிகளையும், *`கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'* என்ற வரிகளின் பெருமையையும் நம்மால் உணர முடிந்தது.

Published Date : 13-08-2018
நன்றி
விகடன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here