கேரளாவில் மீண்டும் பெருமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் இன்று (ஆகஸ்ட், 25) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை வரலாறு காணாத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 14 மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, 10லட்சத்துக்கும் அதிகமானோர் அவர்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்கினர்.நிலச்சரிவாலும், வெள்ளத்தாலும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வீடுகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்த நிலையில் பலர் வீட்டை விட்டு வெளியேறினர்.
தற்போது மழை குறைந்து தண்ணீர் வடிந்து பலர் அவர்களது வீட்டிற்கு திரும்புகின்றனர். மாசுபடிந்த வீடுகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சேறும், சகதியுமாய் உள்ள வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் கேரள மாநிலத்துக்கு திடீரென்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருகின்ற 27 மற்றும் 28 ஆம் தேதி மீண்டும் பெருமழைக்கு வாய்ப்புள்ளது. 27 ஆம் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் பெருமழை பெய்யக்கூடும் என்றும் 28 ஆம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய வட கேரள பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த மழையின் அளவு 7 முதல் 11 செ.மீ இருக்கும் எனவும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் இரவு நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்க வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக