நாடு முழுவதும் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் நல்லாசிரியர் பட்டியலை உருவாக்கி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில், விருதுக்குரியவர்களை மத்திய அரசு தேர்வு செய்து விருதுகளை அறிவிக்கும். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் இந்த விருதுகளை வழங்குவார்.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நல்லாசிரியர் தேர்வில் மத்திய அரசு கடும் விதிமுறைகளை கொண்டு வந்தது. அதன்படி, மாநில அரசுகள் நல்லாசிரியர்களை தேர்வு செய்ய முடியாது. ஆசிரியர்களே நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு தேசிய ஆசிரியர் விருதுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த ஆசிரியர்களில் 6 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சதி மட்டும் விருதுக்கு தேர்வாகியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆசிரியை சதி, மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிகிறார். நாடு முழுவதும் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருதுகளின் எண்ணிக்கை 45ஆக குறைக்கப்பட்டதால் தமிழகத்திலும் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக