அங்கன்வாடி முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு தினசரி 1 முட்டை வீதம் வாரம் 5 முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு வாரம் 3.50 கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்கிறது.
முட்டை டெண்டரில் புகார்
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் முறையில் தமிழக அரசால் மாற்றம் கொண்டுவரப்பட்டது. மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வந்த டெண்டர் முறையை மாற்றி ஆண்டுக்கு ஒரே டெண்டர் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஸ்டி என்ற நிறுவனம் டெண்டரை கைப்பற்றி சத்துணவு மையங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக முட்டை சப்ளை செய்து வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
கடந்த மாதம் கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் ஒரு வார காலம் அதிரடி சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் இறுதியில் நடைபெற்ற மாநில அளவிலான முட்டை டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதில் கிறிஸ்டி நிறுவனமும் பங்கேற்றிருந்தது. முட்டை டெண்டர் ரத்து செய்யப்பட்டாலும், மேலும் 2 மாதத்துக்கு சத்துணவுக்கு கிறிஸ்டி நிறுவனம் முட்டை சப்ளை செய்ய அரசு டெண்டரை நீட்டித்து உத்தரவிட்டது.
புதிய டெண்டர் தேதி அறிவிப்பு
தமிழக அரசின் சமூகநலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநரகம், தற்போது முட்டை டெண்டரில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்வதற்கான டெண்டர் வரும் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோழிப் பண்ணையாளர்கள் வரவேற்பு
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சின்ராஜ் நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 22) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“ தற்போது நடை முறையில் உள்ள மாநில அளவிலான டெண்டர் முறை ரத்து செய்யப்பட்டு மண்டல அளவிலான டெண்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள் 6 மண்டலமாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் நடத்தப்படுகிறது.
6 மண்டலங்களில் கொள்முதல்
சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஒரு மண்டலமாகவும், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஒரு மண்டலமாகவும், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஒரு மண்டலமாகவும், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர் ஒரு மண்டலமாகவும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஒரு மண்டலமாகவும், மதுரை, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஒரு மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள்
டெண்டரில் பங்கேற்கும் ஒரு நிறுவனம் 3 மண்டலத்துக்கு மேல் பங்கேற்கக் கூடாது. அந்த நிறுவனம் அரசுடன் ஆண்டுக்கு ரூ 10 கோடிக்குக் குறையாமல் வியாபாரம் செய்து இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.90 கோடிக்கு அரசுடன் வியாபாரம் செய்து இருக்க வேண்டும் என்ற முந்தைய விதிமுறை தற்போதைய புதிய டெண்டரில் இடம்பெறவில்லை. இதன் மூலம், கோழிப் பண்ணையாளர்கள் டெண்டரில் பங்கேற்க முடியும்.
முட்டை டெண்டர் 6 மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும்; 6 மாதத்திற்குப் பிறகு மீண்டும் டெண்டர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் புதிய டெண்டர் அறிவிப்பை வரவேற்பதாகவும் இதன் மூலம் இனி சத்துணவு முட்டை டெண்டரில் கோழிப் பண்ணையாளர்கள் கலந்துகொள்ள முடியும். குறைவான விலையில், சத்துணவுக்குத் தரமான முட்டைகள் வழங்குவோம்” என்று கூறினார் சின்ராஜ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக