ஆப்பிள் ஏன் இந்தியாவில் அடி வாங்குகிறது?
தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம், புதிய பல அம்சங்களுடன் இந்த ஆண்டுக்கான மூன்று ஐ-போன்களை நேற்று அறிமுகம் செய்தது. இந்த புதிய வரவுகள் பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும் இந்தியாவில் சரிந்து கிடக்கும் ஆப்பிளின் சந்தை மதிப்பை உயர்த்த இவை எந்த விதத்திலும் உதவியாக இருக்காது என்றே கூறப்படுகிறது. அதைவிடக் குறைவான விலையில் ஆண்ட்ராய்டின் ஃப்ளாக்ஷிப் மாடல்கள் சாம்சங், ஒன் பிளஸில் கிடைப்பதே இதற்கு முக்கியக் காரணம்.
ஹாங்காங்கைச் சேர்ந்த தொழில்நுட்ப சந்தை ஆலோசனை நிறுவனமானகவுண்ட்டர்பாயின்ட் நடத்திய ஆய்வில், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய ஏற்றுமதி முதல் முறையாகச் சரிவைச் சந்தித்திருப்பதாக தெரியவந்துள்ளது. 2017ஆம் ஆண்டு 32 லட்சம் ஐ-போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் 2018இல் அது 24 லட்சமாகக் குறைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் 28முதல் விற்பனைக்கு வரவுள்ள iPhone XS, iPhone XS Max ஆகிய ஐ-போன்கள் முந்தைய மாடல்களைக் காட்டிலும் விலை அதிகமானவை. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளதால் 20 சதவிகிதம் இறக்குமதி வரி இருப்பதால் கூடுதல் சுமை ஏற்படும் என அங்குள்ள தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த விலை ஐ-போன் என்று வெளியாகியுள்ள iPhone XR, இந்தியாவில் அக்டோபர் 26 முதல் ரூ.76,900 என்ற விலைக்கு விற்பனைக்கு வரவுள்ளது.
iPhone XS, iPhone XS Max ஆகியவற்றின் விலை 1 லட்சத்துக்கு மேல் இருப்பதால் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தர்கள் அறிமுகச் சலுகையாக முதன்முறையாக கேஷ் பேக், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ஈஸி EMI உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள இந்த மூன்று ஐ-போன்களிலும் விரும்பத்தக்கப் பல அம்சங்கள் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், இவற்றின் விலை லட்சத்திற்கும் மேலாக இருப்பதால் இவற்றை வாங்க மக்கள் யோசிக்கவேண்டியிருக்கும். கடந்த வெளியீடுகளைக் காட்டிலும் இம்முறை வெளியான மாடல்களின் ஆரம்ப விலை 13 முதல் 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாகவும் இந்தியாவின் சில்லறை விற்பனைத் துறையினர் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக